நகங்களைப் பிடுங்கி- கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட ஆனந்த சுதாகரன்- உண்மையைப் போட்டுடைத்த தாயார்!!

அரவணைவில் இருந்த தாயாரும் உயிரிழந்த நிலையில் , சுதாகரனின் பிள்ளைகள் தற்போது பாதுகாப்பின்றி உள்ளனர். பிள்ளைகளுக்காகவது மனம் இரங்கி ஆனந்த சுதாகரனை விடுவியுங்கள்.

இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் தாயார் அரசிடம் உருக்கமான கோரிக்கையை விடுவித்துள்ளார்.

நவோதயா மக்கள் முன்னணியால் கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மகன் கைது செய்யப்பட்டு சுமார் 10 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தாயார் உயிரிழந்த நிலையில், பிள்ளைகள் இருவரும் தற்போது அவரின் அம்மம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றனர்.

எனினும் , அவர்களின் செயற்பாட்டில் தற்போது மாற்றத்தைக் காணக்கூடியதாகஉள்ளது. அம்மம்மாவிற்கு தற்போது 64 வயது என்பதால் அவரால் குழந்தைகளைச் சரிவரக் கவனித்துக் கொள்ள முடியாது.

நான் தற்போது மகனின் விடுதலைக்காக கொழும்பிலேயே தங்கியுள்ளதால், பேரப்பிள்ளைகளை என்னாலும் கவனித்துக் கொள்ள முடியாத இக்கட்டான நிலையில் உள்ளேன். அவ்வப்போது சென்று பார்த்து வர மாத்திரமே என்னால் முடியும். அவரின் தந்தையால் மாத்திரமே பிள்ளைகளை நன்கு பராமரிக்க முடியும்.

ஆனந்த சுதாகரன் குற்றப்பத்திரிக்கையில் கைச்சாத்திட்டுள்ளமை தொடர்பில் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதலளித்த அவரின் தாய் , எனது மகன் தனது சுயவிருப்பத்தின் பேரில் அதில் கைச்சாத்திடவில்லை. அவரிடம் பலவந்தமாக கையெழுத்து பெறப்பட்டுள்ளது. அவர் இதன் போது கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

அவரின் நகங்கள் பிடுங்கப்பட்டுள்ளன , கால்கள் முறிக்கப்பட்டுள்ளன, கழுத்துப்பகுதியில் காயங்கள் ஏற்படுத்தப் படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், கைசாத்திட்டால் தன்னை விடுவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததன் பேரிலேயே எனது மகன் குற்றப்பத்திரிக்கையில் கைச்சாத்திட்டார்.

இதேவேளை , ஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து தற்போதைய நிலையில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி
நவராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனந்த சுதாகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தவறானது. குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனந்த சுதாகரன் சாட்சிக்கூண்டில் வைத்து, தன்னிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பத்திரத்தில் பலவந்தமாகக் கையெழுத்து பெற்றார்கள் என்று
குறிப்பிட்டுள்ளார்.

அவர் சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பில் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை கோரப்பட்டிருந்த போதும் , அது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை. அறிக்கை ஆனந்த சுதாகரனுக்கு சாதகமாக அமைந்த காரணத்தினாலேயே அரச தரப்பினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

சாட்சியம் வழங்கிய சந்தேகநபர் சாட்சியம் அளிக்கும் போது நல்ல மனநிலையில் இருந்தார் என வழக்கு விசாரணைகளின் போது நிரூபிக்கப்படும். எனினும் இந்த வழக்கில் அது இடம்பெறவில்லை
என்று சட்டத்தரணி நவராஜ் குறிப்பிட்டார்.