ஸ்விஃப்ட் வங்கி வலையமைப்பில் ஊடுருவியதா அமெரிக்கா?

இணைய பாதுகாப்பு வலையத்தை தகர்த்து, ஸ்விஃப் வங்கி வலையமைப்பில் ள்ளத்தனமாகப் புகுந்து அதன் தரவுகளைத் திருடியதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பான என்.எஸ்.ஏ. குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது.
அதற்கான தொழில்நுட்பங்களை என்.எஸ்.ஏ. உருவாக்கி, நிதிப் பரிவர்த்தனைகளை அது கண்காணித்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுகிறது.
இத்தகைய தொழில்நுட்பங்கள், கறுப்புச் சந்தையில் விற்கப்பட்டால், 2 மில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதனுடன் ஸ்விஃப்ட் உலக வங்கிகளின் அமைப்பை தோல்வியடைய செய்யும் சாத்தியக்கூறு இதிலுள்ளதாக சுட்டிக்காட்டும் ஆவணங்களும் வெளியாகியுள்ளன.
வங்கதேச மத்திய வங்கிக் கணக்கிலிருந்து பணம் மாயம்; தலைவர் ராஜினாமா
யாஹூவில் நிகழ்ந்த கணினி வலையமைப்பு ஊடுருவலால் ஒரு பில்லியன் பேர் பாதிப்பு
இந்த ஆவண கோப்புகள் முன்னதாக “தேசிய பாதுகாப்பு நிறுவன மால்வயர்” பற்றிய தகவல்களை கசியவிட்ட ஷேடோ புரோக்கர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்கள் உண்மையாக இருந்தால், 2013 ஆம் ஆண்டு எட்வர்ட் ஸ்னோடன் வெளியிட்ட தேசிய பாதுகாப்பு நிறுவன ஆவண கோப்புக்களை விட முக்கியமான ஆவணங்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

அமெரிக்கா அண்மையில் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை தாக்க பயன்படுத்திய “அனைத்து குண்டுகளின் தாய்” வெடிகுண்டை மேற்கோள் காட்டும்படியாக, இந்த ஆவண கசிவை “எல்லா பாதுகாப்பு அம்சத்தையும் உடைக்கும் கணினி மென்பொருட்களின் தாய்” என்று டிவிட்டரில் ஸ்னோடன் பதிவிட்டுள்ளார்.
கசிந்துள்ள ஆவணங்களால் சுட்டிக்காட்டப்படும் நிறுவனங்கள் இதனை நிராகரித்து, கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டாலும், இந்த “தரவுகள் வெளிப்பாடு” நம்பத்தகுந்தவையே என்று பல நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பெல்ஜியத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்விஃப்ட், அதன் வலையமைப்பிலோ அல்லது செய்தி சேவைகளிலோ திருட்டுத்தனமாக நுழைந்து தரவுகள் திருடப்பட்டுள்ளதற்கு எந்த சான்றுகளும் தென்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது.
இந்த ஆவணங்களின் உண்மை தன்மையை பிபிசியால் உறுதி செய்ய முடியவில்லை. இந்த கசிவு பற்றி என்.எஸ்.ஏ. கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு வங்கதேச மத்திய வங்கியின் ஸ்விஃப்ட் வங்கி வலையமைப்பில் திருட்டுதனமாக நுழைந்து 81 மில்லியன் டாலரை குற்றவாளிகள் வெற்றிகரமாக கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது.
“ஸ்விஃப்ட்” என்பது உலக அளவில் வங்கிகள் தங்களுடைய பணத்தை அனுப்ப மற்றும் பெற்றுக்கொள்ளும் சேவைகளை வழங்கும் வலையமைப்பாகும்.