கரவெட்டி பிரதேச சபைத் தவிசாளரைப் பதவி விலக கோரி சுதந்திரக் கட்சி போர்க்கொடி (வீடியோ)

“கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் ஆளுமையற்றவர். அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டும . அவரது இடத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை கொண்டுவரவேண்டும்”

இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் சபையில் இன்று வாதாடினார்.

இதனால் கரவெட்டி பிரதேச சபையின் இன்றைய அமர்வின் முக்கால் பகுதி தவிசாளர் ஐங்கரனுக்கும் உறுப்பினர் இராமநாதனுக்கு இடையிலான கருத்து மோதலாக இருந்தது.

அத்துடன் சபை பிற்பகல் 2.30 மணியுடன் முடிவுக்கு வந்தது.

கரவெட்டி (வடமராட்சி தெற்கு மேற்கு) பிரதேச சபை அமர்வு இன்று (28) வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு பிரதேச சபை தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் தலமையில் ஆரம்பமானது.

பிரதேச அபிவிருத்தி தொடர்பாக உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்து உரையாடினர்.

அத்துடன், கரவெட்டி பிரதேச செயலகம், பிரதேச சபையுடன் இணைந்து செயலாற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் முன்வைத்தார்.

அது தொடர்பாக உரிய தரப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் எடுத்துரைத்தார்.

நெல்லியடி மீன் சந்தையை அபிவிருத்தி செய்யவேண்டிய தேவையுள்ளது என தவிசாளர் சபைக்கு தெரியப்படுத்தினார். அந்த விடயத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் இராமநாதன் தவிசாளருடன் கருத்து முரண்பட்டார்.

“கூட்டமைப்பின் தலைவர்கள் கொழும்பில் சிங்கள கட்சிகளுக்கு வால் பிடிக்கின்றனர்” என கட்சியை இழுத்து தவிசாளரை வம்புக்கிழுத்தார்.

எமது தலைமையைப் பற்றிப் பேசுவதற்கு நீர் யார்? என தவிசாளர் கேள்வி எழுப்பினார்.

உறுப்பினர் இராமநாதனின் தர்க்கத்துக்கு தவிசாளரும் கருத்துக்களை வீசினார். அதனால் மானஸ்தான் போல் சபையிலிருந்து வெளியேறினார் உறுப்பினர் இராமநாதன். சில நிமிடங்களில் மீளவும் சபைக்குள் வந்து அவர் அமர்ந்தார்.

“ஆளுமையற்ற தவிசாளர் பதவி விலகவேண்டும். தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரை தவிசாளராக நாங்கள் நியமிக்கின்றோம்” என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் தவிசாளரிடம் கூறினார்.

“என்னுடைய ஆளுமை எனக்குத் தெரியும். உமக்கு விளக்கமில்லாவிடின் வரும் நான் வகுப்பு எடுக்கிறேன். என்னைப் பதவியிலிருந்து விலகுமாறு கேட்க நீர் யார்? என் மீது நடவடிக்கை எடுக்க எனது கட்சித் தலைமை இருக்கிறது” என தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் ஒருமையில் பதிலளித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் உச்சத்துக்கு வந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் சிவராசா முன்மொழிந்த இன அழிப்பு தீர்மானம் மட்டுமே சபையில் ஏகமனதாக நிறைவேற்றபட்ட நிலையில் இன்றைய சபை அமர்வு நிறைவடைந்தது.