பார்கின்சன் நோய் சிகிச்சைக்கு நம்பிக்கை தரும் மூளை செல் சிகிச்சை

விஞ்ஞானிகள் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோயிலிருந்து மீண்டு வருவதற்கு பயன்படுகின்ற ஒரு வழியை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக நம்புகின்றனர். மூளையில் பழுதடைந்துள்ள செல்களை (உயிரணுக்களை) மாற்றிவிட்டு மூளையின் செல்களை மாற்றியமைத்து உருவாக்கி இதனை சாதிக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

பார்கின்சன் நோயால் அழிவுற்ற செல்கள் செய்து வந்த வேலைகளை, மனித மூளையின் செல்களை கொண்டு செய்ய வைக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
பார்கின்சன் நோயினால் அறிகுறிகளை கொண்டிருந்த சோதனை எலிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சோதனை எலிகளின் நிலைமை சீராகி இருப்பது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற சோதனைகள் மக்களிடம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னால், இன்னும் பல சோதனைகள் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

நேச்சர் பயோடெக்னாலஜி” பத்திரிகையில் வெளியான இந்த ஆய்வு தொடக்க நிலையில் இருந்தாலும் மிகவும் நம்பிக்கை தருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சிகிச்சை மிகவும் பாதுகாப்பானதா? என்று விஞ்ஞானிகள் இன்னும் சோதித்து அறிய வேண்டியுள்ளது.

மூளைக்கும், தண்டுவடத்திற்கும் இடையில் ஆதரவு வழங்கும் நட்சத்திர வடிவ செல்களாக அமைந்திருக்கும், மாற்றியமைக்கப்பட்ட செல்கள், பார்கின்சன் நோயால் இழந்துபோன டோபோமைன் உற்பத்தி நியுரான்கள் போல, செயல்பட முடியுமா என்பதை விஞ்ஞானிகள் இன்னும் சோதித்து அறிய வேண்டியுள்ளது.

பார்கின்சன் நோய்
பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு போதுமான டோபோமைன் உற்பத்தியாவதில்லை. அதனை உற்பத்தி செய்கின்ற சில மூளை செல்கள் இறந்து விடுவதே இதற்கு காரணமாகும்.

இந்த செல்களை கொன்றுவிடுபவை எவை என்பது தெரியவில்லை. ஆனால் டோபோமைனை இழந்து விடுவது, நடுக்கம், நடப்பது மற்றும் நகர்வதில் கஷ்டம் போன்ற பலவீனமாக்கும் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

 

இதனால் ஏற்படக்கூடிய அறிகுறிகளை கையாளுவதற்கு மருந்துகளை வழங்கி மருத்துவர்கள் உதவலாம். ஆனால், இதற்கான காரணத்திற்கு சிகிச்சை அளித்து குணமாக்க முடியாது.

இந்நிலையில், சேதமடைந்த டோபோமைன் நியுரான்களை மாற்றிவிட்டு, மூளையில் புதியவற்றை செலுத்துகின்ற வழிமுறைகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.

 

இந்த சமீபத்திய ஆய்வை மேற்கொண்ட சர்வதேச ஆய்வாளர் அணியினர் செல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படாத இன்னொரு வேறுபட்ட அணுகுமுறையை பயன்படுத்தினர்.

மூளையில் ஏற்கெனவே இருக்கின்ற செல்களை மாற்றியமைக்க, சிறிய மூலக்கூறுகளின் கலவையை அவர்கள் பயன்படுத்தினர்.

 

மனித மூளைக்கும், தண்டுவடத்திற்கும் இடையில் ஆதரவு வழங்கும் நட்சத்திர வடிவ செல்களின் ஒரு மாதிரியை இந்த மூலக்கூறு கலவையோடு ஆய்வகத்தில் சேர்த்து உருவாக்கினர். மிகச் சிறந்த இணைகளாக இல்லாவிட்டாலும், டோபோமைன் நியுரான்களை போல தோற்றமளிக்கும் செல்களை அவை உருவாக்கின.

அடுத்து, அதே கலவையை நோயுற்ற சோதனை எலிக்கு வழங்கினர்.

இந்த சிகிச்சை அவற்றின் மூளையின் செல்களை மாற்றியமைத்து சோதனை எலிகளின் பார்கின்சன் அறிகுறிகளை குறைத்துவிடும் வேலையை செய்வது தெரியவந்தது.