காணாமல் போன விடுதலை புலிகளின் போராளியை இராணுவ சீருடையில் கண்ட பெற்றோர்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்ட கானநிலவன் என்ற முன்னாள் போராளி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், காணாமல் போன கானநிலவனை அவருடைய தாயார் இராணுவ சீருடையில் கண்டதாக தெரிவித்துள்ளார்.முள்ளிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்த கதிரேசன் செவ்வேல் என்பவர் 2008ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளில் அமைப்பில் போராளியாக இணைந்துள்ளார்.

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்தவாறு தனது மகன் தம்மை சந்தித்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.இறுதி யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் தமது பிள்ளை பற்றிய தகவல் எதுவும் தெரியாத பெற்றோர் கானநிலவனை காணவில்லை என்று தேடியுள்ளனர்

ஆனால் 2012ம் ஆண்டில் புதுக்குடியிருப்பு பகுதியில் கானநிலவனின் தாயார் தனது பிள்ளையை இலங்கை இராணுவ சீருடையுடன் இராணுவத்தினர் கொண்டுசென்றதை கண்டதாக தெரிவித்தார்.

பிறிதொரு நாள் அவ்வாறே கானநிலவனின் தந்தையாரும் தனது மகனை இராணுவ சீருடையைில் கண்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் இருவருக்கும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் காணாமல் போனோரை கண்டறிவது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டபோது அதிகாரிகளிடம் இந்த விடயத்தை குறிப்பிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் தமது காணாமல் போன பிள்ளை தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில் நேற்று தமது பிள்ளையின் பெயர் முகவரி போன்ற விபரங்களை இராணுவ அதிகாரி ஒருவர் கேட்டு அறிந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் தமது பிள்ளை உயிருடன் உள்ளார் என்றும், அவரை இராணுவத்தினர் தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்