பிசுபிசுத்தது டெனீஸ்வரனின் முயற்சி: அழைப்பை நிராகரித்தனர் அதிகாரிகள்!

பா.டெனீஸ்வரன் இன்று மாகாண நிர்வாகத்திற்குள் மேற்கொண்ட கலக முயற்சி வெற்றிபெறவில்லை. மாகாண நிர்வாகத்தை மீறி, அமைச்சின் அதிகாரிகளிற்கு தனியான கூட்டமொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தபோதும், அது எதிர்பார்த்த வெற்றியளிக்கவில்லை.

பா.டெனீஸ்வரனை அமைச்சிலிருந்து நீக்கியதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடைவிதித்திருந்தது. அதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவு வடக்கு ஆளுனருக்கு அனுப்பப்பட்டது.

வடக்கு முதலமைச்சருக்கும், அமைச்சர்களிற்கும் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தபோதும், அவை தவறான தகவல்கள். அமைச்சர்களை நீக்கும், நியமிக்கும் அதிகாரமுள்ள ஆளுனருக்கு மட்டுமே நீதிமன்றத்தின் கட்டளை அனுப்பப்பட்டது. நீதிமன்ற கட்டளையை பத்திரிகையாளர் ஒருவர் மூலமே கடந்த 03ம் திகதி முதலமைச்சர் பெற்றுக்கொண்டார்.

நீதிமன்ற கட்டளையை பெற்ற வடக்கு ஆளுனர் தற்போது கொழும்பில் தங்கியிருக்கிறார். இந்த நிலைமையை எப்படி கையாள்வதென அவர் சட்டமா அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகிறார். அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு ஆளுனரை சார்ந்தது. ஆளுனரின் செயலாளர் இளங்கோவன் நேற்று (05) விடுமுறையில் இருந்தார். இன்று கடமைக்கு வந்தபோதும், இன்று மதியம்வரை அப்படியொரு அறிவித்தல் ஆளுனர் அலுவலகத்தில் இருந்து முதலமைச்சருக்கு அனுப்பப்படவில்லை.

இந்தநிலையில், டெனீஸ்வரன் நேற்று அதிகாரிகளிற்கு ஒரு கடிதம் அனுப்பினார். நீதிமன்ற கட்டளைப்படி தானே அமைச்சர், தனது கட்டளையை மட்டுமே கேட்க வேண்டும் என்றும், இன்று மன்னாரில் அமைச்சிற்குட்பட்ட திணைக்கள தலைவர்களிற்கு கூட்டமென்றும் அறிவித்தல் விடுத்தார்.

இந்த அறிவித்தலால் அதிகாரிகளிற்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இன்றைய சந்திப்பிற்கு வீதி அபிவிருத்தி அதிகாரபையின் தலைவர் மட்டுமே கலந்து கொண்டிருந்தார். ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள் கூட்டத்திற்கு செல்லவில்லை. யாழ் மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு வாகனத்தில் செல்வதென்றால், அமைச்சின் செயலாளரின் அனுமதி தேவை. டெனீஸ்வரன் அமைச்சிற்கு செயலாளர் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதனால் அதிகாரிகள் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாரிற்கு செல்ல முடியாதென டெனீஸ்வரனிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, திங்கள்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்திப்பை நடத்த டெனீஸ்வரன் திட்டமிடுவதாக தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

டெனீஸ்வரனின் நடவடிக்கைகள் வடமாகாணசபையில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதுடன், தமிழ் தேசிய அரசியலை பொறுப்புணர்வுடன் முன்னெடுக்கவில்லை, குளத்தை கலக்கி பருந்திடம் கொடுக்கும் வேலையை செய்கிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.