இறுதி போரில் நடந்தது என்ன? பகுதி 01

பீஷ்மர்

விடுதலைப்புலிகள் அமைப்பு யுத்தத்தில் தோல்வியடைந்ததை இன்னும் ஜீரணிக்க முடியாத, நம்ப முடியாதவர்கள் பலருள்ளனர். காரணம்- புலிகள் அவ்வளவு பலத்துடன் இருந்தார்கள். அவர்கள் யுத்தத்தில் தோல்வியடைவார்கள் என யாரும் கற்பனையே செய்திருக்கமாட்டார்கள்.

விடுதலைப்புலிகள் ஏன் யுத்தத்தில் தோல்வியடைந்தார்கள்?

இந்த கேள்விக்கு இன்றுவரை பலரிற்கு விடை தெரியாது. யுத்தத்தின் கடைசிக்கணங்கள் எப்படியிருந்தன? விடுதலைப்புலிகள் எங்கே சறுக்கினார்கள்? யுத்தத்தை புலிகளின் தலைமை எப்படி அணுகியது? ஏன் அவர்களால் வெல்ல முடியவில்லை? நெருக்கடியான சமயங்களில் புலிகளின் தலைமைக்குள் நடந்த சம்பவங்கள் என்ன?

பெரும்பாலானவர்களிற்கு மர்மமாக உள்ள இந்த விசயங்களை முதன்முதலாக பகிரங்கமாக பேசப் போகிறது இந்த தொடர். புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் என- வாராந்தம் இரண்டு பாகங்கள் பதிவேற்றுவோம். வாசகர்களின் ஒத்துழைப்பை பொறுத்து புதிதாக எப்படி செய்வதென்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்.

விடுதலைப்புலிகளை பற்றி இவர்கள் என்ன புதிதாக கூறப்போகிறார்கள்… பேஸ்புக்கை திறந்தால் இதுதானே நிறைந்து கிடக்கிறது என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால்- “கடைசிக்கணத்தில் மனைவியை அனுப்பிவிட்டு குப்பிகடித்த தளபதி“… “பிரபாகரனை ஏற்ற வந்த அமெரிக்க கப்பலின் பின் சீட்டில் இருந்தவரின் அதிர்ச்சி வாக்குமூலம்“, “முள்ளிவாய்க்காலில் நடந்தது தலைவரின் தீர்க்கதரிசனம்“ போன்ற பேஸ்புக்கில் பரவும் விசயமல்ல இது. இந்த தொடரை பற்றி நாமே அதிகம் பேசவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் நீங்களே பேசுவீர்கள்.

இறுதியுத்தததில் நடந்த சம்பவங்களையே அதிகம் இதில் பேசுவோம். ஆனால், தனியே அதை மட்டுமே பேசவும் போவதில்லை. விடுதலைப்புலிகளின் உள்விவகாரங்கள் பலவற்றையும்- அது புலிகளின் ஆரம்ப நாளாகவும் இருக்கும்- பேசப்போகிறோம். இந்த தொடர் விடுதலைப்புலிகள் பற்றிய கணிசமான புதிரை வாசகர்களிற்கு அவிழ்க்கும். புலிகளை பற்றிய பிரமிப்பை சிலருக்கும்… புலிகளை பற்றிய விமர்சனத்தை சிலருக்கும்… புலிகள் பற்றிய மதிப்பை சிலருக்கும்… புலிகள் பற்றிய அதிருப்தியை சிலருக்கும் ஏற்படுத்தும். ஏனெனில், விடுதலைப்புலிகள் பற்றிய முழுமையான குறுக்குவெட்டு தொடராக இது இருக்கும். இதுவரை புலிகள் பற்றிய வெளியான எல்லா தொடர்களையும் விட, இது புதிய வெளிச்சங்களை உங்களிற்கு நிச்சயம் பாய்ச்சும்.

இராணுவத்தின் 53வது டிவிசன் கட்டளை அதிகாரியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண. அவரது நந்திக்கடலுக்கான பாதை நூலில் இறுதி யுத்தத்தில் புலிகள் எப்படி போரிட்டார்கள், புலிகளின் செயற்றிறன் எப்படியிருந்தது, புலிகளின் தளபதிகள் மற்றும் தலைமையின் முடிவு எப்படியமைந்தது என்பது பற்றி எழுதியுள்ளார். அவர் எதிர்தரப்பில் நின்று போரிட்டதால் பல உள்விவகாரங்கள் தெரியாமல் போயிருக்கலாம்.

2006 இல் மன்னாரில் தொடங்கிய படைநடவடிக்கை வெள்ளாமுள்ளிவாய்க்காலில் 2009 இல் நிறைவடைந்தது. இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்நதது? அபாயத்தை புலிகள் உணராமல் இருந்தனரா? எதிரி தொடர்பாக பிழையான கணக்கு போட்டு விட்டார்களா?

அதனைவிட, விடுதலைப்போராட்டத்தின் வரலாற்று பாதையில் எந்த இடத்தில் சறுக்கியது? நீண்டநாள் நோவு உடலில் திடீரென ஆபத்தை ஏற்படுத்துவது போல எப்பொழுதோ விட்ட பழைய தவறுகள் எவையெல்லாம் பின்னாளில் பாதகமானது? எல்லாம் சரியாக இருந்து வெறு வெளிக்காரணிகள் பாதகமாக அமைந்ததா? என்ற நீண்ட கேள்விகள் உள்ளன.

இறுதி யுத்த மர்மங்கள் இன்னும் நீடிக்கிறது. பிரபாகரன் இருக்கிறாரா.. இல்லையா? இருந்தால் எங்கே? மரணமானால் எப்படி மரணித்தார்? இப்படி ஏராளம் கேள்விகள் தமிழ் சமூகத்தில் பூடகமாகவே உள்ளன. யதார்த்தத்தின் பாற்பட்டு சில விடயங்களை அனுமானிக்க முடிந்தாலும், நமது சமூகத்தில் அது பகிரங்கமாக பேசப்படாமலும் உள்ளது.

இந்த இரகசியங்கள் அவிழ்க்கப்பட வேண்டும். சரி, தவறு, வீரம், அர்ப்பணிப்பு, தியாகம் என ஏராளமானவற்றால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் கணங்கள் மனம் நடுங்க வைப்பவை. தானே உருவாக்கிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியை தனிஆளாக கடைசி மட்டும் பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரன் என்ன செய்தார்? ஒவ்வொரு தளபதிகளாக வீழ்ந்து கொண்டிருக்க, பிரபாகரனின் மனநிலை எப்படியிருந்தது?

இதுபற்றியெல்லாம் பகிரங்கமாக பேச இதுவரை தமிழர்களிற்கு வாய்ப்பிருக்கவில்லை. புலிகள் அமைப்பில் முடிவுகளை எடுக்கும் தலைமைக்கு நெருக்கமாக இருந்தவர்கள் யாரும் இதுவரை அதை பேசவில்லை. அப்படியானவர்களுடன் பேசி, அமைப்பின் பல்வேறு பிரிவுகளிலும் இருந்தவர்களுடனும் பேசி, சம்பவங்களை யாரும் தொகுப்பாக்கவில்லை. அந்தகுறையை போக்கி, புலிகள் அமைப்பின் உள்வீட்டு தகவல்கள், இறுதி யுத்தகால சம்பவங்களை தொகுப்பாக்கியுள்ளோம். மிக நம்பகமான மூலங்களை கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த தொடர், புலிகள் பற்றி வெளியாகியிருக்காத பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தும். குறிப்பாக இறுதி யுத்த தகவல்கள். புலிகள் பற்றி வெளியான தொடர்கள், புத்தகங்களுடன் ஒப்பிடும்போது இது பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதை நிச்சயமாக கூறலாம்.

விடுதலைப்புலிகளின் தோல்விக்கு பலரும் பலவிதமான காரணங்களை சொல்கிறார்கள். சர்வதேச கூட்டிணைவு, எதிர்பார்த்த உதவிகள் வராமை, காட்டிக் கொடுப்பு என ஏராளம் காரணங்கள். இந்த சரிவு ஏதோ எதிர்பாராத விதமாக ஏற்பட்டதாதை போன்ற தோற்றத்தை அந்த காரணங்கள் உருவாக்குகின்றன. ஆனால் அது உண்மையல்ல.

சமாதான பேச்சுக்கள் முறியும் தறுவாயிலேயே, பேச்சுக்களை முறித்தால் என்ன நடக்கும் என்பதை பிரபாகரன் அறிந்திருந்தார். யுத்தம் ஆரம்பிக்கும் தறுவாயில், அதிசயங்களை நிகழ்த்தாவிட்டால் என்ன நடக்குமென்பதை பிரபாகரன் அறிந்தே வைத்திருந்தார். அதை அவர் போராளிகள் மத்தியில் தெளிவாக சொல்லியிருந்தார்.

2008 இன் இறுதிப்பகுதி. பரந்தன் சந்தியை 58வது டிவிசன் படையினர் பூநகரி தொடக்கம் கரடிப்போக்கின் பின்பகுதி வரையான பகுதிக்குள்ளால் குறிவைத்து நகர்ந்து கொண்டிருந்தனர். கிளிநொச்சியில் புலிகள் கடுமையாக போரிட்டபடியிருந்தனர். அங்கு பலமான மண்அணைகள் அமைக்கப்பட்டிருந்ததால், 57வது டிவிசன் படையினர் முன்னேற முடியாமல் தேங்கி நின்றனர். 58வது டிவிசன் படையினர் பரந்தன் சந்தியை அடைந்தால் மாத்திரமே, இராணுவத்தால் அடுத்து ஏதாவது செய்ய முடியுமென்ற நிலைமை.

அந்த நாட்களில், முரசுமோட்டையில் அமைந்துள்ள ஒரு முகாமில்- முன்னர் பயிற்சி முகாமாக இருந்தது- களமுனை போராளிகளுடன் ஒரு அவசர சந்திப்பு நடந்தது. பிரபாகரனும் வந்தார். பெரும்பாலான முக்கிய தாக்குதல் தளபதிகள் நின்றார்கள். பொட்டம்மானும் வந்திருந்தார்.

அன்றைய கூட்டத்தில் பிரபாகரன் அதிகம் பேசவில்லை. கொஞ்சம் இறுகிய முகத்துடனேயே வந்தார். சலனமற்ற குரலில் உரையாற்றினார். மிகச்சுருக்கமாக அவர் ஆற்றிய உரையின் சாரம்- தொடர்ந்து இப்படியே பின்வாங்கிக் கொண்டிருக்க முடியாது. இராணுவத்தை ஏதோ ஒரு இடத்தில் நிறுத்தி, ஏதாவது அதிசயம் நடத்தி காட்ட வேண்டும். அதை என்னால் செய்ய முடியாது. நீங்கள்தான் செய்ய வேண்டும். நாம் எல்லோருமே இனிவரும் நாட்களில் அர்ப்பணிப்புடன் போரிடுவோம்.

இதை சொல்லிவிட்டு, தளபதிகளுடன் கொஞ்சம் கடிந்து கொண்டார்.

தளபதிகள் அனைவரையும் முன்னரணிற்கு அருகில் சென்று, போராளிகளுடன் தங்கியிருக்குமாறு சொன்னார். போராளிகளுடன் தளபதிகளும் நின்றால்தான், அவர்கள் உற்சாகமாக போரிடுவார்கள் என்றார்.

அந்த சந்திப்பில் பிரபாகரன் சொன்ன ஒரு வசனம் மிக முக்கியமானது. வரவிருக்கும் அபாயத்தை அவர் தெரிந்தே போரிட்டார் என்பதை புலப்படுத்தும் வசனம் அது.

“இனியும் பின்னால் போய்க்கொண்டிருக்க முடியாது. இப்பிடியே போய்க்கொண்டிருந்தால் விரைவில் எறும்பைப்போல நசுக்கி எறிந்து விடுவார்கள்“ – இது அன்றைய கூட்டத்தில் பிரபாகரன் சொன்ன வசனம்!

போராளிகளுடன் கலந்துரையாடிவிட்டு பிரபாகரன் அடுத்து செய்ததுதான் இன்னும் ஆச்சரியமானது.

நடக்கப்போவதை மட்டுமல்ல, அது எப்படி நடக்கப் போகிறது என்பதையும் பிரபாகரன் தெரிந்தேயிருக்கிறார் என்றும் சொல்லலாம். இது பிரபாகரனை மகிமைப்படுத்த சொன்ன வசனமல்ல. சம்பவத்தை சொல்கிறோம், நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

தான் எடுத்து வந்திருந்த – The Spartans என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான 300 வீரர்கள் திரைப்படத்தின் சில நிமிட காட்சியை திரையில் காண்பிக்க சொன்னார். படத்தின் இறுதிக்காட்சியே காண்பிக்கப்பட்டது. வாழ்வா சாவா என்ற நிலையில் உறுதியுடன் போராடி ஸ்பாட்டன் மரணமான காட்சி.

இந்த திரைப்படம் பிரபாகரனிற்கு மிகப்பிடித்தமான திரைப்படமாக இருந்தது.

ஸ்பார்ட்டாவின் 300 வீரர்கள் தமது தாய் நாட்டிற்காக இலட்சக்கணக்கான பாரசீக படையுடன் கடைசிவரை போரிட்டு இறந்த கதை. 300 வீரர்களை தலைமை தாங்கிய மன்னனின் வீரரம் திரைப்படத்தில் வெகுஅழகாக காட்சிப்படுத்தப்பட்டது. அவனது இறப்பின் மூலம் அந்த நாட்டிற்கு உடனடியாக விடுதலை சாத்திப்படாவிட்டாலும், விடுதலைக்கான சூழலை ஏற்படுத்தியதுதாக திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. படத்தின் இறுதிக்கட்டத்தில் குறைந்த வீரர்களுடன் நின்ற ஸ்பார்டனை பாரசீகபடை சுற்றிவளைத்தது.

வெட்டைவெளியில் நடந்தது அகோரபோர். ஒவ்வொரு வீரராக வீழ, ஸ்பார்ட்டன் சளைக்காமல் போரிட்டு, கடைசியில் மடிந்தான். வெள்ளாமுள்ளிவாய்க்காலிலும் இறுதியில் அப்படியொரு சூழலில்த்தான் இறுதிப்போர் நிகழ்ந்தது.

(தொடரும்)

நன்றி : தமிழ் பக்கம் (மூலம்)

Get real time updates directly on you device, subscribe now.

You might also like