விஜயகலாவுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் உருவாக வேண்டும் என்று தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக அரசியலமைப்பின்படி வழக்கு தொடர முடியாது என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசரான சரத் என் சில்வா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் இந்தக் கருத்துக்குப் பின்னால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தூண்டல் இடம்பெற்றிருக்கலாம் என்றும் சரத் என் சில்வா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்தவாரம் நடைபெற்ற அரச நிகழ்வொன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகள், ஸ்ரீலங்காவில் மீண்டும் உருவாக வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்தை தொடர்ந்து தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் எதிர்ப்புக்கள் ஏற்பட்டதோடு விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திலும் பொது எதிரணியினரால் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டதோடு இராஜாங்க அமைச்சுப் பதவியும் அவரிடமிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் மீண்டும் ஸ்ரீலங்காவில் உருவெடுக்க வேண்டும் என்று கூறியமைக்காக விஜயகலா மகேஸ்வரனை கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்கும்படி தென்னிலங்கையைச் சேர்ந்த கடும்போக்குவாத மற்றும் பௌத்த அமைப்புக்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றன.

இந்த நிலையில் கொழும்பில் இன்று (09.07.2018) பகல் நடைபெற்ற தேசிய ஒன்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசரான சரத் என் சில்வா கலந்துகொண்டிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீது அரசியலமைப்பின்படி எவ்வாறான நடவடிக்கை எடுக்கமுடியும் என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் இதன்போது இவ்வாறு பதிலளித்தார்.

‘அவர் வெளியிட்ட அறிவிப்பானது பிரிவினைவாதம் தொடர்பாக வழங்கிய சத்தியப்பிரமாணத்திற்கு எதிரானதாகும். அதனால் இப்படிப்பட்ட தருணத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யமுடியும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமதி மகேஸ்வரன் என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சராக இருந்தவர். தனிப்பட்ட முறையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருப்பவர். அவரே இந்த உரையை ஆற்றியிருக்கின்ற நிலையில் அவரது தனிப்பட்ட நோக்கத்திற்கு இதனை மேற்கொண்டிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

இதற்குப் பின்னால் ஒரு வழிநடத்தல் இருக்கும் என்று சந்தேகிக்கின்றேன். மாகாண சபைத் தேர்தல் தாமதப்படுவது குறித்த பிரச்சினை சமூகத்தில் காணப்படுகின்ற நிலையில், இந்தப் பிரச்சினையை மூடிமறைப்பதற்காக ஏதாவது ஒரு பிரச்சினையை மேலெழுப்பப் பார்க்கின்றனர்.

விஜயகலா மகேஸ்வரன் எதனைக் கூறினாலும் யாருமே தத்தமது சிந்தனையை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். அவருக்கு பெரிதான அரசியல் அனுபவமும், செல்வாக்கும் இல்லை. அவர் ஏன் இதனைக் கூறினார் என்பதே பிரச்சினை.

விக்கேஸ்வரன் அல்லது மாவை சேனாதிராஜா போன்றவர்கள் பேசியிருந்தால் அது வேறு. இதனையடுத்து அவர் இராஜினாமா செய்துவிட்டார். இதுபோன்று திலக் மாரப்பன, விஜேதாஸ ஆகியோரும் இராஜினாமா செய்து மீண்டும் பதவிகளைப் பெற்றுக்கொண்டதுபோல விஜயகலாவும் மீண்டும் வரலாம்.

எனவே அந்தந்த சந்தர்ப்பத்தில் ஊதி பெரிதுபடுத்தப்படுகின்ற விடயமாகும். தேர்தல்கள் பிற்போடப்படுவதால் அடுத்த வருடம் முழுவதும் தேர்தலிலேயே காலம் செல்லும். இருந்த போதிலும் அரசியலமைப்பின் 6-ஆவது திருத்தத்திற்கு முரணான கருத்தை வெளியிட்ட போதிலும் இதன் படி விஜயகலா செய்யவில்லை. ஆகவே அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யமுடியாது. அதற்குப் பதிலாக அவர் விரைந்து அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துவிட்டார. மக்களை திசைதிருப்பும் செயலாகவே இதனை பார்க்கின்றோம். விடுதலைப் புலிகளுடன் அவர் தொடர்புகளை வைத்திருந்தாரா என்பது எங்களுக்குத் தெரியாது”.

இதேவேளை மாகாண சபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டு வருகின்றமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே காரணம் என்று முன்னாள் தலைமை நீதியரசர் இதன்போது மேலும் குற்றம் சாட்டினார்.

‘மாகாண சபைத் தேர்தல் முறை மாற்றம் செய்யப்பட்டது. தினேஸ் குணவர்தன தலைமையிலான குழு அமைக்கப்பட்டு 6 வருடம் சென்றது. அதன் பின்னரே இந்த முறை கொண்டுவரப்பட்டது. தற்போது புதிய தேர்தல் முறை தொடர்பாக குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு தெரிவுக்குழு சந்தர்ப்பத்தில் திரிவுபடுத்தப்பட்டுவிட்டது. பிரதமர் மீதான கோபத்தில் நான் இதனைக் கூறவில்லை. பிரதமர்தான் இதனை செய்கின்றார். அவர் 40 வருடங்களாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றார். வாழ்க்கை காலத்தில் அதிகளவு நாடாளுமன்றத்தில்தான் கழித்துள்ளார்.

இந்நிலையில் திருத்தங்கள், சட்டங்களை கொண்டுவருவது அவருக்கு பொழுதுபோக்கு விளையாட்டாக மாறிவிட்டது. சில மாகாண சபைகளில் உறுப்பினர்களுக்கு அமர்வதற்கு ஆசனம்கூட இல்லை. மாகாண சபைகளுக்கான தொகுதிகளை பிரிப்பது கடினமான காரியம். எனவேதான் மூன்றிலிரண்டு பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் அவசியம் என்று கூறப்பட்டது.

ஆகிலும் இந்த விவகாரத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிரிவுகளை ஆராயும். இவ்வாறே காலதாமதம் ஏற்படும். பிரதமருக்கு குழுவொன்றை அமைத்து இறுதிசெய்வதற்கு அதிகாரம் தெரிவுக்குழுவில் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அவர் செய்தால் அவருக்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவேதான் பழைய முறையிலேயே தேர்தலை நடத்துவோம் என்று ரவூப் ஹக்கீம் கூறியிருக்கின்றார். அதனை நான் நீதிமன்றத்திலேயே சுட்டிக்காட்டிவிட்டேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like