பிரான்ஸ் நாட்டில் கடல் அலைகளால் அடித்துச்செல்லப்பட்ட சிறுமிகள்: ஒருவர் பலி…ஒருவர் மாயம்

பிரான்ஸ் நாட்டில் கடல் அலைகளால் அடித்துச்செல்லப்பட்ட இரண்டு சிறுமிகளில் ஒருவர் பலியாகிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்கு பிரான்ஸில் உள்ள கடற்கரை பகுதியான Marseille என்ற இடத்தில் தான் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே பகுதியை சேர்ந்த தந்தை ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் நேற்று மாலை 6 அணியளவில் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அப்போது, புயல் காரணமாக கடலில் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. மூவரும் கடற்கரையில் அமர்ந்து உரையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென வானிலை மோசமடைந்ததும் கடல் அலைகள் உயரமாக எழும்பி கரையை அடைந்துள்ளது.

இச்சம்பவத்தில் எதிர்பாராத விதமாக மூவரும் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆனால், விரைந்து செயல்பட்ட மீட்புக் குழுவினர் தந்தை மற்றும் 4 வயது சிறுமியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தந்தைக்கு உடனடியாக சுயநினைவு திரும்பியுள்ளது.

சிறுமி அபாயக் கட்டத்தில் இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், கடல் அலைகள் மோதிய காரணத்தினால் சிறுமியின் இதய ஓட்டம் சீராக இல்லை.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதே சமயம், கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட மற்றொரு சிறுமியை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக மீட்புக் குழுவினரின் உதவியுடன் பொலிசார் தீவிர தேடுதலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.