அபாயகரமான குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் உயிருடன் இருந்தது எப்படி? வெளியான ரகசிய தகவல்.!

15 நாட்களாக குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் உயிருடன் இருந்தது எப்படி? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 23–ந் தேதி தாய்லாந்து தாம் லுவாங் குகைக்குள் சென்ற 12 இளம் கால்பந்து வீரர்களும் அவர்களது பயிற்சியாளரும் அங்கு பெய்த திடீர் மழை வெள்ளத்தால் குகைக்குள்ளே சிக்கினர்.

இந்நிலையில் இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவியுடன் தாய்லாந்து வீரர்கள் காணாமல் போனவர்களை தேட தொடங்கினர். பின்னர் 9 நாட்களுக்கு பிறகு கடந்த 2–ந் தேதி குகைக்குள் சிக்கிய அனைவரும் உயிரோடு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, நீர்மூழ்கி வீரர்கள் மீட்பு பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதன் பலனாக கடந்த 8–ந் தேதி 4 சிறுவர்களும், நேற்று 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர்.

எஞ்சிய 4 சிறுவர்களையும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரையும் இன்று மீட்ட மீட்புக்குழுவினர், குகைக்கு சீல் வைத்தனர்.
அபாயகரமான அந்த குகைக்குள் சிக்கிமீட்கப்பட்ட அனைவரும் உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருப்பதாக கூறியுள்ளனர்.மேலும் அதற்கு காரணம் தங்களது பயிற்சியாளர் எனவும் கூறியுள்ளனர்.

அதாவது குகைக்குள் 12 சிறுவர்களும், துணைப்பயிற்சியாளர் சிக்கிக்கொண்டபோது, அவர்களிடம் ஓரிரு நாட்களுக்குத் தேவையான உணவுகள் மட்டுமே கைவசம் இருந்துள்ளது.மேலும் மழையும் தொடர்ந்து பெய்கிறது என்பதை அறிந்தவுடன் துணைப்பயிற்சியாளர் எகாபோல் உஷாரானார்.

தங்களிடம் இருக்கும் உணவுகளைச் சிறுவர்களுக்கு கொடுத்து அவர்களைச் சோர்வடையாமல்பார்த்துக்கொண்டார். ஆனால், உணவு தீர்ந்தவுடன், தியானத்தின் மூலம் உடலில் சக்தியை எப்படிச் சேமிப்பது என்பதை சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.

காற்றும், சூரிய ஒளியும் அதிகமாக உள்ளே புகமுடியாத இடத்தில் இருந்ததால், மூச்சுவிடுவதிலும் சிரமம் ஏற்படும் என்பதை உணர்ந்த அவர் தான் கற்றுக்கொண்ட தியானம், மூச்சுப்பயிற்சிக் கலை மூலம் சிறுவர்களுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களைப் பாதுகாத்தார்.

மேலும் மனதை ஒருமுகப்படுத்தி, சிறுவர்களை பெரும்பகுதிநேரம் அமரவைத்து அவர்களின் சக்தியை செலவழிக்காமல், சோர்வடையாமல் துணைப்பயிற்சியாளர் பாதுகாத்துள்ளார்.பின்னர் நீர்மூழ்கி வீரர்கள் அளித்த ஆக்ஸிஜன் வாயு மற்றும் உணவுகளும் சிறுவர்களை காக்க உதவியது

இவ்வாறு மாணவர்களை கவனமுடன் பார்த்து உயிரை காப்பாற்றி வைத்த பயிற்சியாளர் எகாபோலிற்கு பாராட்டு குவிந்தவண்ணம் இருக்கிறது.