வெளிநாடு செல்லும் கனவில் மணமகனுக்கு அதிர்ச்சி கொடுத்த மணப்பெண்! இலங்கையில் நடந்த சம்பவம்

பதிவுத் திருமணத்துக்கு மணமகன் காத்திருந்த சந்தர்ப்பத்தில் மணப்பெண் தப்பியோட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளர்து.

திருமண ஏற்பாடுகள் செய்து, பதிவுத் திருமணத்துக்காகப் பதிவாளர் பணியகத்தில் மணமகன் உட்படச் சகலரும் காத்திருக்க, அங்கு வந்த மணமகள் திடீரென்று தப்பியோடிவிட்டார்.

இதனால் இரண்டுவீட்டாருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் இலங்கையின் தென்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆடைத்தொழிற்சாலையொன்றில் பல காலமாகத் தொழில்புரிந்து வந்த அந்தப் பெண்ணின் கனவு, வெளிநாட்டுக்குத் தொழில்புரியச் செல்லவேண்டும் என்பதே. இதற்கிடையில் பெண்ணின் நெருங்கிய உறவினர் ஒருவர் நல்ல மாப்பிள்ளை இருக்கிறார் என்று பெண்ணிடம்கூறி வற்புறுத்தித் திரும ணத்துக்குச் சம்மதிக்க வைத்துள்ளார்.

அந்தப்பெண் வருங்காலக் கணவரிடம் வெளிநாட்டுப் பயண ஆசையைக் கூறியுள்ளார். பதிவுத் திருமணம் செய்தபின்னர் அந்தப் பெண் வெளிநாட்டுக்குச் செல்லுமாறு கூறியுள்ளார்.

பதிவுத் திருமணத்துக்கான நாள் குறிக்கப்பட்டது. இரண்டு வீட்டாரின் குடும்பங்களும் திருமணப் பதிவாளர் பணியகத்தில் திருமண பதிவுக்கான நல்ல நேரம் வரும்வரை காத்திருந்தனர். நல்ல நேரமும் வந்தது. மணமகன் தயார். ஆனால் மணப் பெண்ணைக் காணவில்லை. விசாரித்தபோது அங்கு நின்றிருந்த காரில் ஏறி மாயமாகிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் அலைபேசியில் தொடர்புகொண்ட அந்தப் பெண், இந்தத் திருமணத்தில் இணைந்துவிட்டால் தன் வெளிநாட்டுக் கனவு நிறைவேறாது என்றும், அதனால்தான் அந்த இடத்தை விட்டுத்தான் வெளியேறியதாகக் கூறியுள்ளார்.

அதனால் அங்கு இரண்டு குடும்ப உறவினர்களுக்கிடையிலும் தர்க்கம் ஏற்பட்டு விவாகப் பதிவாளர் தலையிட்டு சமாதானமாக்கி அவர்களை அனுப்பிவைத்தார் என்று தெரிவிக்கப்பட்டது.