பாலகுமாரனிற்கு பிரபாகரன் கொடுத்த அதிர்ச்சி! – இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 02

பீஷ்மர்

300 வீரர்கள் படத்தில் பிரமாண்ட எதிரியுடன் சிறிய, உறுதியான, தாய்நிலத்தில் பற்றுக்கொண்ட படை மோதி அழியும். நிறைய சலுகைகள் கொடுத்து சரணடையுமாறு பாரசீக மன்னன் கேட்டுக்கொண்டபோதும், ஸ்பார்ட்டா மன்னன் லியானிடஸ் சரணடையவில்லை. அவரின் முடிவுடனேயே படைவீரர்களும் இருந்தனர். வெற்றி அல்லது வீரமரணம்தான் அவர்களின் நிலைப்பாடு.

ஸ்பார்ட்டன்களின் வீரம், படம் எடுக்கப்பட்ட விதம், திரைக்கதை, உணர்வுபூர்வ நடிப்பு என எல்லாம் சேர்ந்து படத்தை மெகாஹிட்டாக்கியது. உலகம் முழுவதும் உள்ள அநீதிக்கெதிரான, போராடும் மக்கள் அனைவரின் இதயத்தில் தங்கியபடம் இது.

அந்தப்படம் பிரபாகரனின் இதயத்திலும் தங்கிவிட்டது.

பிரபாகரன் அந்தப்படத்தை சுமார் 20 தடவைகளிற்கும் அதிகமாக பார்த்துவிட்டார். எல்லாப் போராளிகளும் அந்தப்படத்தை பார்க்க வேண்டுமென்பதிலும் கூடுதல் ஆர்வமும் காட்டினார். தமிழில் வெளியானால் கூடுதல் நன்மையென நினைத்து, தமிழ் மொழிபெயர்ப்பையும் செய்ய உத்தரவிட்டார்.

அந்த சமயத்தில் விடுதலைப்புலிகளிடம் திரைப்பட மொழிபெயர்ப்பு பிரிவு இருந்தது. தமக்கு தேவையான, நல்ல படங்களை அவர்கள் தமிழாக்கம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் தமிழாக்கத்தில் 300 வீரர்கள் வெளியாகியது. அதுதவிர, 300 பருத்திவீரர்கள் என்ற பெயரில் இந்திய தமிழாக்கமும் வெளியானது.

பாலகுமாரன்

பல்வேறு சந்தர்ப்பங்களில் போராளிகள், முக்கியஸ்தர்களிடம் அந்த படம் பற்றி பிரபாகரன் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். 300 வீரர்கள் படம் வெறும் படமாக அல்லாமல், ஒரு கொள்கையாக… சித்தாந்தமாக பிரபாகரன் நினைத்தார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தராக இருந்தவர் பாலகுமாரன். ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவர். பின்னர் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போனவர்.

ஈரோஸ் அமைப்பு இராணுவபலம் மிக்கதல்ல. இராணுவ வழிமுறைகள் அவ்வளவாக கைவரப்பெற்றதுமல்ல. இடதுசாரி சித்தாந்தங்கள் உள்ளிட்ட சித்தாந்தங்களை கற்று அதுபற்றி விவாதித்துக் கொண்டிருந்த அமைப்பு. ஈரோஸ் பற்றி நகைச்சுவையாக சில விடயங்கள் சொல்வார்கள். ஒன்று, பேசியே தமிழீழம் பிடிக்கலாமென நினைத்தார்கள் என்பது. (அதாவது, விஜயகாந்த் பக்கம்பக்கமாக வசனம் பேசி எதிராளிகளை தெறிக்க விடுவதை போல). அதுபோல, ஒரு விடயத்தில் உறுதியாக இல்லாமல் நழுவிச்செல்வதை ‘ஈரோஸ்பாணி’ என்பார்கள். உறுதியாக இல்லாமல், பாம்பக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களை இயக்கங்கள் பல இருந்தகாலத்திலேயே ‘ஆள் ஈரோஸ்காரன்’ என்று நகைச்சுவையாக கூறுவார்கள்.

கிளிநொச்சியில் பாலகுமாரனின் வீடு இருந்தது. கிளிநொச்சி குள அணைக்கட்டிலிருந்து பிரிந்து செல்லும் முதலாவது பெரிய வீதியில்-பரவிப்பாஞ்சான்- அவரது வீடிருந்தது. அங்கு கிளிநொச்சியில் வாழ்ந்த படைப்பாளிகள், அரசியல் விமர்சகர்கள் என சிலர் கூடிக்கதைப்பது வழக்கம்.

அது சமாதானப்பேச்சுக்கள் குழப்பமான சமயம். யுத்த தயாரிப்புக்களில் இருதரப்பும் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தன. வன்னிக்கான தரைவழிப்பாதைகள் மூடப்பட்டுவிட்டன.

நீண்ட சமாதானத்தின் பின்னர் யுத்தம் ஆரம்பிக்கின்றதென்பதும் அவர்கள் மிரண்டுவிட்டார்கள். பாலகுமாரனும் மிரண்டுவிட்டார். அரசாங்கத்துடன் விட்டுக்கொடுப்பாக நடந்து கொள்ள வேண்டுமென்பதை போன்ற ஒரு கருத்தை அந்த வட்டம் ஏற்படுத்திக்கொண்டது. அந்தக்கருத்தை விடுதலைப்புலிகளின் தலைமைக்கும் கொண்டு சேர்க்க வேண்டுமென விரும்பினார்கள். ஆனால் அது அவர்களால் முடியாமல் இருந்தது.

இராணுவத்தின் பிடியில் பாலகுமாரனும், மகனும்

புலிகளுடன் இருந்த அரசியல் விமர்சகர்கள், புத்திஜீவிகள் எனப்படுபவர்கள் கிளிநொச்சியிலிருந்த புலிகளின் அரசியல்த்துறை செயலகம், ஈழநாதம் பத்திரிகை, புலிகளின்குரல் வானொலி, தமிழீழ தேசிய தொலைக்காட்சி என்பனவற்றை உள்ளடக்கிய வட்டத்தில்த்தான் இருந்தார்கள். இந்த வட்டம் புலிகளின் கொள்கை முடிவை எடுப்பதல்ல. எடுக்கப்பட்ட முடிவுகளை அறிப்பவை. பிரபாகரனிற்கு பேசிக்கொண்டிருப்பவர்களில் நம்பிக்கை கிடையாது. அதனால் இப்படியானவர்களை சற்று தொலைவிலேயே வைத்திருந்தார். புலிகளின் கொள்ளை முடிவிற்கும் இந்த வட்டத்திற்கும் தொடர்பிருக்கவில்லை.

தமது முடிவை எப்படி பிரபாகரனிடம் சேர்ப்பிப்பதென அவர்கள் தலையை பிய்த்துக்கொண்டு, இறுதியில் பாலகுமாரனிடம் அந்த பொறுப்பை கொடுத்தனர். (இந்த விசேட தொடர், தமிழ்பக்கத்தின் உத்தியோகபூர்வ பக்கத்தில் மட்டுமே இனிவரும் காலத்தில் பிரசுரமாகும். தமிழ் பக்கத்தை லைக் செய்து வைத்திருப்பதன் மூலம், எதிர்காலத்தில் சிரமமின்றி தொடரை படிக்க முடியும். கூடவே, இன்னொரு நன்மை, அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். (யாழ்தீபம் முகப்புத்தகத்தை லைக் செய்ய இங்கு அழுத்துங்கள்) தமபாலகுமாரனும் அதே நிலைப்பாட்டில் இருந்ததால், விவகாரம் சுலபமாகிவிடும் என அவர்கள் நினைத்தனர். தமது யோசனைகளை ஒரு அறிக்கையாக தயாரித்தும் வைத்திருந்தார்கள்.

ஆனால், அந்த சமயத்தில் பாலகுமாரனாலும் பிரபாகரனை சந்திக்க முடியவில்லை. எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பலனில்லை. இறுதியில், அதனை பிரபாகரனின் முகவரியிட்டு, அவரது பாதுகாப்புப்பிரிவிடம் சேர்ப்பித்து விட்டார்கள். இது நடந்தபோது யுத்தம் ஆரம்பிக்கவிருந்த சமயம்.

இந்த கடிதத்திற்கு பிரபாகரனிடமிருந்து பதிலே வரவில்லை. அதை படித்ததைபோல, விடயத்தை தெரிந்ததைபோல காட்டிக்கொள்ளவுமில்லை. தான் அனுப்பிய கடிதம் கிடைத்திருக்குமோ, இல்லையோ என்ற குழப்பத்தில் பாலகுமாரன் இருந்தார்.

இதற்கு பின் பலமாதங்கள் கழித்து, சாள்ஸ்அன்ரனி படையணியின் சிறப்பு நிகழ்வொன்று நடந்தது. அப்பொழுது யுத்தம் மன்னாரில் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. பிரபாகரன் கலந்து கொண்டார். முக்கிய தளபதிகள், பிரமுகர்களையும் சாள்ஸ் அன்ரனி படையணி அழைத்திருந்தது. பாலகுமாரனும் போயிருந்தார்.

பிரபாகரன் முன்வரிசையில் இருந்தார். தளபதிகளும் இருந்தனர். வரிசையின் முடிவில் பாலகுமாரனும் இருந்தார். நிகழ்வு முடிந்து புறப்படுவதற்காக கதிரையிலிருந்து பிரபாகரன் எழுந்து வந்தார். வரிசையின் முடிவிலிருந்த பாலகுமாரனை கண்டதும் ‘அண்ணை… எப்பிடியிருக்கிறியள்’ என கேட்டு, மிகச்சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் சுகநலன்களை விசாரித்து கொண்டார். புறப்படும் போது ‘நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது’ என கூறி, தனது உதவியாளரை கூப்பிட்டு, ‘அண்ணைக்கு ஒரு சி.டி குடுத்துவிடுங்கோ’ என்றுவிட்டு புறப்பட்டு விட்டார்.

வீட்டுக்கு வந்து படத்தை போட்டுப்பார்த்தார் பாலகுமாரன். அது 300 பருத்திவீரர்கள் படம்.

(தொடரும்)

Get real time updates directly on you device, subscribe now.

You might also like