உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி 42 என்ற கோல் கணக்கில் வெற்றி

உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி 42 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வரலாற்றில் 2 ஆவது தடவை கிண்ணத்தை வென்றது.

முதல் முறையாக இறுதியாட்டத்திற்குள் நுழைந்த குரோஷியா பெரும் ஏமாற்றமடைந்தது.

உலகமே உற்று நோக்கி இருந்த உலகக் கிண்ண கால்பந்தின் இறுதிப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரான்ஸ், குரோஷியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்தே விறுவிறுப்பாக சென்றது.

போட்டியின் 19ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் மரியோ மாண்ட்ஸூகிக் பிரான்ஸ் அணிக்காக “சேம் சைற்’ கோல் அடித்தார். பந்தை தலையால் தடுக்க முயல, அறியாமல் அது பிரான்ஸ் அணியின் கோலாக மாறியது. இதனால், பிரான்ஸ் அணி 10 என முன்னிலை வகித்தது.

பின்னர், அடுத்த 10ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் பெரிசிக் அந்த அணிக்காக அட்டகாசமான ஒரு கோல் அடிக்க போட்டி 11 என சமநிலை ஆனது. இதனால், போட்டியில் விறுவிறுப்பு அதிகரித்தது.

இதன்பிறகு, பிரான்ஸ் அணிக்கு 36ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரான்ஸ் வீரர் கீர்ஸ்மேன் கோல் அடித்து அந்த அணியை 21 என முன்னிலைப் பெறச் செய்தார்.

இதன்பிறகு முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் மேலும் கோல் அடிக்கவில்லை. இதன்மூலம் பிரான்ஸ் அணி முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 21 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

முதல் பாதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெற்றதால் 2ஆவது பாதி ஆட்டம் விறுவிறுப்புடன் தொடங்கியது. 60ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் போக்பா கோல் அடிக்க அந்த அணி 31 என வலுவான முன்னிலை பெற்றது. இதனால், குரோஷிய அணி மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்தது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள் 65ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் பாபி மீண்டும் ஒரு கோல் அடித்து குரோஷியாவுக்கு மேலும் அதிர்ச்சியளித்தார். 65ஆவது நிமிடத்தில் 41 என பின்தங்கியிருந்ததால் உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை குரோஷியா இழந்தது.

இருப்பினும், விடாமுயற்சியோடு குரோஷிய வீரர்கள் போராடினர். இதற்கு பலனாக 69ஆவது நிமிடத்தில் மரியோ மாண்ட்ஸூகிக் பிரான்ஸ் கோல் காப்பாளரை ஏமாற்றி கோல் அடித்தார். இதன்மூலம் ஆறுதல் அடைந்த குரோஷிய அணி 24 என்ற நிலை அடைந்தது

இதன்பிறகு, இரு அணிகளும் மேற்கொண்டு கோல்கள் அடிக்கவில்லை. இதன்மூலம், பிரான்ஸ் அணி 42 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 20 வருடங்களின் பின் மீண்டும் கிண்ணத்தை வென்றது.

640 கோடி ரூபா; உலக கிண்ணத் தொடரின் மொத்த பரிசுத் தொகை இலங்கை நாணயப்படி சுமார் 6,700 கோடி ரூபாவாகும். சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு கிண்ணத்துடன் சுமார் 640 கோடி ரூபா பணம் கிடைத்தது. இது 2014 ஐ விட 50 கோடி ரூபா அதிகம். இறுதியாட்டத்தில் தோற்ற குரோஷிய அணிக்கு சுமார் 472 கோடி ரூபா கிடைத்தது

Get real time updates directly on you device, subscribe now.