தொடரும் மர்ம நபர்களின் அட்டகாசம்: அச்சத்தில் யாழ். மக்கள்!

வடக்கில் அதிகரித்துவரும் இனந்தெரியாத நபர்களின் அட்டகாசங்கள், பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

அந்தவகையில், யாழ். அச்சுவேலி பத்தமேனிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டிற்கும், வீட்டிலிருந்த உபகரணங்களுக்கும் சேதமேற்படுத்திய சம்பவமொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு அரங்கேறியுள்ளது.

நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றிருந்த இச்சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம குழுவினர் வீட்டின் கதவை சேதப்படுத்தி உடைத்து வீட்டிற்குள் நுழைந்து, வீட்டினுள்ளிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

மர்ம நபர்களின் அட்டகாசத்தை கண்டு அச்சமடைந்தவர்கள், அவர்களின் பிடியில் சிக்காது பாதுகாப்பாக வெளியேறி தப்பிச் சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, யாழ். நல்லூர் பகுதியில் நேற்று நள்ளிரவில் இனந்தெரியாதோர் வீடொன்றின் மதில் சுவரின் மீது கழிவு எண்ணெய் ஊற்றியும், ஒரு பகுதி உடைத்தும் சேதப்படுத்தியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

வடக்கில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக சட்டம் ஒழுங்கு அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

இவ்வாறாக வடக்கின் சட்டம் ஒழுங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொடிகாமத்தில் வாள்வெட்டு சம்பவமொன்று அரங்கேற்றப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.