ஆசிரிய தொழிலைசமூக பணி என நினைத்து செய்ய வேண்டும்….வடமாகாண கல்விபணிப்பாளர்…

ஆசிரிய தொழில் வாழ்வாதாரத்துக்குரிய தொழில் என்று மட்டும் பாராமல் எதிர்கால சமூகத்தை வளப்படுத்தும் சமூக பணி என நினைத்து செய்ய வேண்டும் என வடமாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஆசிரிய சேவைமுன் பயிற்சி நெறி யாழ் தேசிய கல்வியியற்கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அதில் வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் பயிற்சி பெறும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டுஉரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

ஆசிரியர்களின் மனப்பாங்கில் மாற்றம் கொண்டு வர வேண்டும். கடந்த காலத்தில் சேவையை மட்டும் நோக்கமாக கொண்ட ஆசிரியர்கள் தற்போது இல்லை. ஏனைய மாகாண ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு நோக்கும் போது வடமாகாண ஆசிரியர்களின் மனநிலையிலும் சேவையிலும் மாற்றம் கொண்டுவரவேண்டிய தேவை உள்ளது.
வடமாகாணம் கல்வியில் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்ற விமர்சனம் தொடர்சியாக எழுந்து கொண்டு உள்ளது. சிலர் அதை தெரிவிப்பதிலும் சந்தோசப்படுகிறார்கள். ஆனால் அதற்கு பின் உள்ள விடயத்தை காரணத்தை மறந்து விட்டார்கள்.

கடந்த கால போர்ச்சூழலில் பெற்றோர் மாணவர் அனுபவித்த துன்பங்கள் கொஞ்சமல்ல. நாம் அனுபவித்த துன்பங்களை கூட மறந்து விட்டோம். பல்வேறு வகையில் மிக கொடுமையான துன்பங்களை அனுபவித்தும் பல தடவைகள் இடம்பெயர்ந்து உடமைகளை இழந்தவர்கள் தான் தற்போது பரீட்சை எழுதுகிறார்கள். அதை நாம் சிந்திக்க வேண்டும்.
மாகாணங்களுக்கிடையில் இடம்பெறும் ஒப்பீடுகளின் படி தாய் மொழி சித்தியை பார்க்கும் போது சிங்கள மொழி சித்தி வீதம் கடந்த 10 வருடங்களில் 90 வீதமாக இரந்து வருகிறது எமது தாய் தமிழ் மொழி 80 வீதத்தை அண்டியும் 2016 ஆம் ஆண்டு 75 வீதமாக குறைவடைந்துள்ளது. முக்கிய பாடத்தில் 10 வீத வேறுபாடு உள்ள நிலையில் மாகாணங்களுக்கிடையிலான ஒப்பீடு எந்த அளவு பொருத்தமானது என்பதை ஏற்றுக்கொள்ளவது பொருத்தமற்றது. ஏனெனில் வடக்கில் 95 வீதமான மாணவர்கள் தாய் மொழி தமிழில் தோற்றுகிறர்கள். ஏனையமாகாணங்களில் தாய்மொழி சிங்களத்தில் தான் மாணவர்கள் அதிகளவில் தோற்றுகிறார்கள். இவை அனைத்தையும் சீர்தூக்கி பார்த்து தான் வடக்கு மாகாண கல்வி தொடர்பில் முடிவுக்கு வர முடியும்.
ஆசிரியர்களின் அர்பணிப்பு தொடர்ந்தால் கல்வியில் தொடர்ந்து முன்னேற்றம் காண முடியும். ஆசிரிய தொழில் வாழ்வாதாரத்துக்குரிய தொழில் என்று மட்டும் பாராமல் சமூக பணி என நினைத்து சரிவர செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் தமக்கு ஒப்படைக்கப்படும் மாணவர்களை சித்தியடைய செய்ய வேண்டும்.
சில பாடசாலைகளில் தரம் ஒன்றிலேயே மாணவர்கள் தொடர்பாக தீர்மானத்தை எடுத்து தள்ளி வைக்கிறார்கள் இது பாரிய தவறு. அனைவரும் சித்தியடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் கல்வி கற்பிக்க வேண்டும்.
பாடசாலைகளில் ஒழுங்காக கற்பிக்க முடியாதவர்கள், தமது தொழிலை சரியாக செய்ய முடியாத ஆசிரியர்கள் பலர் உள்ளார்கள். எமது ஒட்டுமொத்த கல்வியை குழப்புவது தான் அவர்களின் குறிக்கோள் அவர்கள் அதிகாரிகள் மேல் குறை சொல்லி நீதி மன்றங்கள் மனித உரிமை ஆணைக்குழுக்களுக்கு செல்கிறார்கள்.
தொழிலில் பிரச்சனை எடுக்கும் ஆசிரியர்களின் வகைக்குள் செல்லாது நல்ல ஆசிரியர்களாக வர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.