கிளிநொச்சியில் மீண்டும் சோகம் – தந்தையில் இறுதிச் சடங்கில் ஒரு மணி நேரம் தனயன்- அரசியல் கைதி சிவகுமார்!!

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின் இறுதிச் சடங்கில் இன்று கலந்துகொண்டார்.

கடந்த 18- ஆம் திகதி இயற்கை எய்திய தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒருமணி நேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்ற சடங்கில் கலந்து கொள்வதற்காக, அரசியல் கைதியான சிவகுமார் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து வரப்பட்டார்.

3 பிள்ளைகளின் தந்தையான இவர் 13 வருடங்களாக சந்தேக நபராக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

கொழும்பு கரந்தெனியா பகுதியில் வாகனத்துடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் பொரள்ள பகுதியில் அமைந்துள்ள நியூ மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக பலப்பிட்டி உயர்நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதாக அவரது மனைவி தெரிவிக்கின்றார்.

13 வருடங்களாக கணவன், தந்தையை பிரிந்திருந்த ஆதங்கத்தில் மனைவியும், பிள்ளைகளும் சிவகுமாரை தழுவி கண்ணீர் விட்டழும் காட்சிகள் கிளிநொச்சி மண்ணை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியது.

சிவகுமார் சிறைச்சாலை பேருந்தில் ஏறும் காட்சியை கண்ட பிள்ளைகள் கதறி அழுதனர். சிறைச்சாலை பேருந்தில் ஏறிய சிவகுமரின் கண்களிலிருந்து நீர் வழிய அவர் பேருந்திலிருந்து கையசைத்த போது அவரது பிள்ளைகளும், உறவினர்களும் வேதனையில் துடித்த காட்சிகள் துக்கத்தை அதிகரித்தது.