யாழ்ப்பாணத்தில் கோட்டைவிடப்பட்ட 1500 மில்லியன் ரூபா திட்டம்: நடந்தது என்ன?

யாழில் முன்மொழியப்பட்ட 1,500 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கோட்டைவிட்ட தகவல்களை தமிழ்பக்கம் ஆதாரபூர்வமாக பெற்றுள்ளது. வடக்கு அபிவிருத்தியில் தமிழ் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் எவ்வளவு வினைத்திறனாக செயற்படுகிறார்கள் என்பதை, நாம் வெளியிடும் தகவல்கள் வாசகர்களிற்கு புரிய வைக்கும்.

2016 டிசம்பரில் The Asia Foundation நிறுவனம் 517 மில்லியன் பெறுமதியான நவீன கடைத்தொகுதியொன்றிற்கான விரைபை யாழ் மாநகரசபை ஆணையாளரிடம் கையளித்திருந்தது. அப்பொழுது ஆணையாளர் நிர்வாகத்தின் கீழ் மாநகரசபை செயற்பட்டிருந்தது.

இந்த திட்டத்திற்கான வரைபையும், நிதி மூலங்களையும் அந்த வரைபு அடையாளம் காட்டியிருந்தது. இலங்கை நிர்வாக நடைமுறைகளின் கீழ் மாநகரசபைகள், அரச வங்கிகளில் பெருமளவு கடன்பெற வழியுண்டு. அண்மையில் கண்டி மாநகரசபை இந்த நடைமுறையின் கீழ் 1000 மில்லியன் கடன்பெற்று, அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

மொத்தம் 517 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த திட்டத்தில் 112 மில்லியன் ரூபாயை வங்கி கடனாகவும், 153 மில்லியன் ரூபாவை கடைகளை வாடகைக்கு பெற்றுக்கொள்பவர்களிடம் இருந்தும், மாநகரசபையின் நிதியிலிருந்து 252 மில்லியன் ரூபாவையும் பயன்படுத்துவதென வழிகாட்டப்பட்டிருந்தது. கடைகளை எந்த அடிப்படையில் வாடகைக்கு விடுவது உள்ளிட்ட பல விடயங்களை வரைபு உள்ளடக்கியிருந்தது.

60 வாகனங்களை தரிக்கவைக்க கூடிய நிலக்கீழ் தரிப்பிடம், நான்கு தளங்களை உள்ளடங்கிய வணிக வளாகம்- 56,100 சதுரஅடி பரப்பில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது.

யாழ் நகரின் வர்த்தக தேவைகளில் 20 வீதத்தையே கார்கில்ஸ் வளாகம் பூர்த்தி செய்வதால், மிகுதி தேவையை இலக்கு வைத்து இந்த திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது. திட்டத்திற்கு செலவிடப்படும் பணத்தை எப்படி மீள பெறுவது, எவ்வளவு காலத்தில் கடனை அடைப்பது என்பவையும் வரைபில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற யாழ். மாநகரசபை மற்றும் மாவட்ட செயலகத்திற்கிடையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர், சத்திரசந்தை பகுதியில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், திட்டத்தை முன்னகர்த்த ஒரு அடிகூட முன்வைக்கப்படாமல் இருந்தது.

இந்த சமயத்தில்தான் யாழில் வணிக வளாகம் ஒன்றை அமைக்க 1,000 மில்லியன் ரூபா மத்திய அரசிடமிருந்து வழங்கப்பட்டது. அந்த திட்டத்தை வடக்கு பிரதம செயலாளர் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் இணைந்து செம்மணியில் நடைமுறைப்படுத்துவதென தீர்மானித்திருந்தனர். இந்த திட்டம் தொடர்பில் மாகாண அரசியல்வாதிகள் யாருடனும் கலந்துரையாடப்படவில்லை.

எனினும், பின்னர் மாகாணசபையில் சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர், இந்த விடயத்தில் வடக்கு முதலமைச்சர் தலையிட்டார். வணிக வளாகத்திற்கான இடத்தை தீர்மானிப்பதில் அரசியல்வாதிகளை ஒன்றிணைத்து முதலமைச்சரால் இடமொன்றை தீர்மானிக்க முடியவில்லை. இந்த இடத்தில் முதலமைச்சரின் பலவீனத்தையும் சுட்டிக்காட்டுகிறோம். 1000 மில்லியன் வணிக வளாக திட்டம் தோல்வியடைந்ததின் ஒரு பகுதி பொறுப்பாளர் முதலமைச்சராவார். மிகுதி வடக்கு அதிகாரிகள், மற்றும் சில மாகாணசபை உறுப்பினர்களை சாரும்.

The Asia Foundation நிறுவன திட்டம் சத்திரசந்தையில் நடைமுறைப்படுத்தப்படுவதால் நல்லூர் முத்திரைசந்தையில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கோரினார்.

இந்த சமயத்தில் இன்னொரு நிகழ்வும் நடந்தது. எழுக தமிழ் நிகழ்வில் “ஒத்துழையாமை“ அறிவிப்புடன் அரசியலில் பிடியை அதிகப்படுத்தி, பின்னர் மாகாணசபை உறுப்பினரானவர் இ.ஜெயசேகரம். வர்த்தகர் சங்க தலைவரான அவர், வர்த்தகர் சங்க நலன்களின் அடிப்படையில் தனது பதவியை பாவித்தாரோ என சந்தேகிக்கத்தக்கதாகவே, இந்த வணிக வளாக திட்டத்தில் நடந்து கொண்டார்.

ஏற்கனவே The Asia Foundation திட்டம் சத்திரசந்தையில் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசின் வணிகவளாக திட்டத்தையும் அந்த இடத்தில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தினார். நகரின் மத்தியில் பிரமாண்ட வணிக வளாகம் அமைத்தால், வர்த்தகர் சங்கம் தனது பிடியை இறுக்கமாக வைத்திருக்கலாமென்பதற்காகவே அவர் சத்திரசந்தையை நோக்கி திட்டத்தை நகர்த்த முயன்றார்.

முத்திரைசந்தையா, சத்திரசந்தையா என்ற இழுபறியில் திட்டம் தாமதமாகி, இறுதியில் 2017இன் வருட முடிவில் அந்த நிதி திரும்பி சென்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like