இலங்கையில் தொடரும் மோசமான சித்திரவதைகள்! வெளியாகிய அதிர்ச்சி அறிக்கை

இலங்கையில் சித்திரவதை பரவலாக நடைமுறையில் உள்ளதாக ஐக்கியநாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்த சீர்திருத்த நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன என அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர் பென் எமேர்சன் இலங்கைக்கான தனது விஜயத்தின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது நிலைமாற்றுக்கால நீதி குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் எவையும் உண்மையான முன்னேற்றத்தை அடைவதற்கு போதுமானவையாக காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் நீதியான நீதித்துறை குறித்த சீர்திருத்தங்கள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன, என குறிப்பிட்டுள்ள அவர் சித்திரவதைகளை பரவலாக பயன்படுத்துபவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரம் தொடர்கின்றது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் காரணமாக எண்ணிக்கை குறிப்பிடமுடியாத அளவிலானவர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

நான் மிகமோசமான ஈவிரக்கமற்ற சித்திரவதைகள் குறித்து என்னுடைய விஜயத்தின் போது அறிந்துகொண்டேன்,சித்திரவதைகள் தடியால் அடித்தல்,பெட்ரோல் மண்ணெண்ணை நிரம்பிய பிளாஸ்டிக் பையினால் முகத்தை மூடி மூச்சுத்திணறச்செய்தல், நகங்களை பிடுங்குதல்,ஊசியால் நகத்தில் குத்துதல் போன்ற சித்திரவதைகள் நடைமுறையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.