யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை…!!

அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற முறையில் பொருட்கள் மற்றும் உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாவகச்சேரி வர்த்தக நிலையம் ஒன்றில் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்தமை கண்டறியப்பட்டுள்ளது.குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழங்கு தொடுக்கப்பட்ட போது, அவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குறித்த வர்த்தகருக்கு எதிராக 9000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.அண்மையில் எழுதுமட்டுவாழ் பிரிவுக்குட்பட்ட உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் விற்பனை நிலையங்களில், சாவகச்சேரி சுகாதாரத் திணைக்கள பொது சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது உசன் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் எலி எச்சங்களுடன் உணவுப் பொருள்கள் வைத்திருந்தமை, எலிகளால் கடியுண்ட அரிசி மா பொதிகளை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் விற்பனைத் திகதி காலாவதியான தேயிலை மற்றும் ஜெலி வகைகளை விற்பனைக்கு வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களுடன் எழுதுமட்டுவாழ் பிரிவு பொது சுகாதாரப் பரிசோதகரால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது வர்த்தகர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து 3 குற்றங்களுக்கும் தலா 3 ஆயிரம் ரூபா வீதம் 9 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்பட்டது .

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் வரும் நிலையில், யாழ் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like