மனித எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள்!!

மன்னாரில் மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள் காணப்படுவதாக நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் ‘சதொச’விற்பனை நிலைய வளாகத்தில் இன்று வியாழக்கிழமை (26) 42 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த மனித புதைகுழி அகழ்வின் போது, மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்படும் முறிவுகளை காணக்கூடியதாக இருப்பதாக அகழ்வில் ஈடுபட்ட நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

எனினும் தற்போது வரை மீட்கப்பட்டுள்ள எந்தவொரு மனித எலும்புக்கூடுகளிலும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 5 சிறு பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதே வேளை குறித்த புதைகுழியில் காணப்பட்ட எலும்புக்கூடுகளை பொறுத்த மட்டில், உடல்கள் ஒழுங்கற்ற வகையில் அவசர அவசரமாக புதைக்கப்பட்டுள்ளமை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த சடலங்கள் எக் காலப்பகுதியில் புதைக்கப்பட்டது என்பது தொடர்பில் இதுவரையில் கண்டரியப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இவர்களுடன் இணைந்து கோமகம பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் இணைந்து குறித்த அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.