கைத்துப்பாக்கிக்கு அனந்தி விண்ணப்பித்தது உண்மையே – ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய அஸ்மின்!

அரசியல் கெட்டுப்போய்விட்டது. அரசியல் ஒரு சாக்கடை, மக்கள் நலன்களை அரசியல்வாதிகள் முதன்மைப்படுத்துகின்றார்கள் இல்லை, அதிகார துஷ்பிரயோகங்கள் மலிந்துவிட்டன என்ற விமர்சனங்களை எமது இளம்வயது முதல் முன்வைத்திருக்கின்றேன்.

அரசியல் சீர்படுத்தப்படல் வேண்டும், நேர்மையான அரசியல் அவசியம், விழுமிய அரசியல் அவசியம் என்று நாங்கள் அதிகமாகப் பேசினோம்.

அதனடியாகத்தான் ஒரு நல்லாட்சியை நிறுவுவதிலே இன்றுவரை கவனம் செலுத்திவருகின்றோம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய வடக்கு மாகாணசபை அமர்வுகளின்போது அனந்தி சசிதரனுடைய கைத்துப்பாக்கி தொடர்பிலான தன்னிலை விளக்கத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அஸ்மின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் இந்திய பாராளுமன்றத்திலே பிரதமர் மோடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்திலே ராகுல் காந்தி அவர்களுடைய ஆவேசமான உரையை செவிமடுத்தேன்.

அவரது ஆத்திரத்தில் இருந்த நியாயம் எனக்குப் புரிந்தது. ஆனால் அதற்கு பதிலளித்த பிரதமர் மோட் அவர்கள் உணர்ச்சிகளைக் கிளறிவிட்டாரே தவிர ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்களுக்கு சரியான பதில்களை முன்வைக்கவில்லை.

அதேபோன்றுதான் கடந்த 16ம் திகதிய அமர்விலே கௌரவ முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் மக்கள் வழங்கிய ஆணைக்கு விரோதமாக தமிழ் மக்களின் ஐக்கியத்திற்கு எதிராக செயற்படுகின்றார் என்பதை விளக்கமாக எடுத்துரைத்தேன்.

அந்த வரிசையில் ஒரு சில அமைச்சர்களும் தங்களுடைய தனிப்பட்ட நலன்களிலே அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள் என்றும் ஒரு பெண் அமைச்சர் தனக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சிடமிருந்து சட்டரீதியாக கைத்துப்பாக்கி ஒன்றினைப் பெற்றுக்கொண்டுள்ளார் என்றும் நான் குறிப்பிட்டேன்.

அந்த அவை நிறைவடைவதற்கு முன்னமே குறித்த செய்தியானது உலகை வலம்வரத் தொடங்கியது.

ஆனால் அன்றைய அமர்வின் பிரதான தலைப்பு “துப்பாக்கி” அல்ல, அன்றைய அமர்விலே “மக்களால் வழங்கப்பட்ட இறைமையானது தனிப்பட்ட கௌரவக் கோளாறுகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டமை” என்ற விடயமே முதன்மையாக இருந்தது.

“சட்டரீதியான துப்பாக்கி” குறித்த கருத்தை அறிவுபூர்வமாக அணுகுவதற்குப் பதிலாக உணர்ச்சி பூர்வமாகவே பலரும் அணுகியிருந்தார்கள்.

குறிப்பிட்ட பெண் அமைச்சர் அவர்களும் அறிக்கைகள் விடுவதிலும், செய்தியாளர் சந்திப்புக்களை நடாத்துவதிலும் அதீத ஆர்வம் காட்டினார், பொதுவாக அனைத்து ஊடகங்களும் இந்த விடயத்தை சூடான விடயமாகவே பிரசுரித்திருந்தார்கள்.

என்னுடைய இந்தக் கருத்தை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை, பலருக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக இதனோடு தொடர்புபட்டவர்கள் மிரண்டுபோனார்கள். எப்படியாவது இந்த விடயம் பொய்யானது என்று நிரூபிக்கவேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது.

ஆனால் இவ்வாறான ஒரு கருத்தை முன்வைத்த பின்னரே பல உண்மைகள் எனது காலடிக்கு வந்து சேர்ந்தன.

அவை அனைத்தையும் வைத்துப் பார்க்கின்றபோது எமது மக்களின் மீதான அனுதாபமும் அன்பும் ஆதரவுமே அதிகரிக்கின்றது.

பொதுவாக இலங்கை மக்கள் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் மிகவும் அப்பாவித்தனமானவர்கள், உணர்ச்சிகளே அவர்களை ஆட்சி செய்கின்றன.

அறிவார்ந்தமான தீர்மானங்களினால் அவர்கள் தங்களுடைய வாழ்வை சீரமைக்கவில்லை.

வடக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பெண்களை மதிக்கின்றார்கள், இரக்கப்படுகின்றார்கள், அனுதாபப்படுகின்றார்கள், விடுதலைப் போராட்டத்தோடு நேரடியான தொடர்புடையவர்கள் மதிப்போடு நோக்குகின்றார்கள், விடுதலைப் போராட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை, இன்னும் அதீத மதிப்போடு நோக்குகின்றார்கள்.

அவை அனைத்தும் எமது மக்களின் இயல்பான குணாதிசியங்கள், ஆனால் வேறுசிலர் இத்தகைய உணர்வுபூர்வமான விடயங்களை தமக்கான மூலதனமாகப் பயன்படுத்துகின்றார்கள், இதனால் இறுதியில் அனுதாபிகளாக இருந்த மக்களே பாதிக்கப்படுகின்றார்கள்.

நான் சமத்துவத்தை விரும்புகின்றேன், அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அல்லது சிங்களவராக தமிழராக முஸ்லிமாக இருந்தாலும், மத ரீதியான வித்தியாசங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும், அல்லது சாதிவேறுபாடுகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் எல்லோரும் சமத்துவமாக மதிக்கப்படல் வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

என்னை எவரும் குனிந்து பார்க்க நான் அனுமதிக்க மாட்டேன், அல்லது எவரையேனும் நான் நிமிர்ந்து பார்க்கவும் எண்ணமாட்டேன்.

நான் முஸ்லிம் என்பதால் வடக்கிலே தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்துப் பேசாமல் இருக்கவோ, அல்லது தமிழ் மக்களுக்கு மத்தியில் இடம்பெறும் வெட்டுக்குத்துக்கள் குறித்துப் பேசாமல் இருக்கவோ, போவதில்லை.

எந்த இடத்திலும் வெளிப்படையாக, உண்மையைப் பேசவும், நீதி நியாயத்தை எடுத்துரைக்கவும் நான் தயங்கியது கிடையாது, இனிமேலும் தயங்கப்போவதும் கிடையாது.

உண்மையை; மக்கள் நலன்சார்ந்த விடயங்களை, நீதியை எல்லா இடத்திலும் உரக்கப்பேசுவேன்.

அதில் எந்த மாற்றமும் கிடையாது; கௌரவ அனந்தி சசிதரனோடு எனக்கு எவ்விதமான காழ்ப்புணர்வுகளோ, வேற்றுமைகளோ கிடையாது.

நான் அவருடைய ஆதரவாளன், ஒரு பெண்ணாக அவரது துணிச்சலைப் பாராட்டியிருக்கின்றேன்.

அவரது அரசியல் பங்களிப்புக்களை நான் வரவேற்றிருக்கின்றேன், ஏன் கடந்த 2013 வடக்கு மாகாணசபைத் தேர்தல் சமயத்திலே எமது மக்களை அவருக்கும் ஒரு வாக்கினை வழங்குகள் என்று பிரச்சாரம் செய்திருக்கின்றேன், அவர் அவைக்கு வந்ததன் பின்னரும், அரசியல் ரீதியாக நெருக்கடிகள் வந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் அவரை நான் ஆசுவாசப்படுத்தியிருக்கின்றேன் அது வேறு விடயம்.

ஆனால் ஒரு அமைச்சராக அவருடைய நடவடிக்கைகள் குறித்து எனக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன.

ஒரு சாதாரண வாயில் காவலாளியை அற்பக் காரணங்களுக்காக வேலையைவிட்டும் இடைநிறுத்தியதிலிருந்து ஒரு பெண் அமைச்சராக தவறுகள் தொடங்குகின்றன.

தனக்குக் கிடைத்திருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் நலன்களை மேம்படுத்துவதை விடவும், தன்னுடைய சொந்த நலன்களை மேம்படுத்திய ஏராளமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன, அவற்றை பிரிதொரு சந்தர்ப்பத்திலே நோக்குவோம்.

முதலமைச்சர் அவர்கள் முன்னைய அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டினை முன்வைத்த ஒருவரை எப்படி அமைச்சராக்கினாரோ, அதேபோன்று மக்களையும் ஒரு சிலர் மடையர்களாக்க முயற்சிக்கின்றார்கள்.

பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராக வழக்கு நடாத்தும் ஒருவர், பாதுகாப்புத் தரப்பினரை கடுமையாக விமர்சிக்கும் ஒருவர், வடக்கிலிருந்து பாதுகாப்புப் படைகள் வெளியேறவேண்டும் என்று கோரிக்கை விடும் ஒருவர் அதே பாதுகாப்பு அமைச்சிடம் தனக்கான தற்பாதுகாப்புக்கு கைத்துப்பாக்கியொன்றினை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இது சட்டவிரோதமானதல்ல, ஆனால் தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள்.

இதோ இருக்கின்றது ஆதாரம்;கௌரவ அனந்தி சசிதரன் அவர்கள் தனக்கு ஆயுதமொன்றினைப் பெற்றுத்தருமாறு பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிப்பதற்காக 2-2-2018 அன்று விண்ணப்பமொன்றினை வழங்கியுள்ளார், அவரே அதிலே கையெழுத்திட்டிருக்கின்றார்.

எனக்கும் சிறப்புரிமை பிரச்சினை எழுப்பப்பட்டிருக்கின்றது. சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் எனக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பொய்யை உண்மையாக்குவதற்கு உண்மையை பொய்யாக்குவதற்கு நீண்ட விவாதப் பிரதிவாதங்கள் தேவை.

என்னிடம் அனந்தி சசிதரன் துப்பாக்கி வேண்டும் என்று கேட்டதனுடைய ஆவணம் என்னிடம் உள்ளது. எங்களுடைய ஒழுங்கின் படி பாதுகாப்பிற்கு உறுப்பினர்கள் துப்பாக்கியை பெற்றுக்கொள்ளலாம் என்பது சட்டரீதியானது.

பிரதம செயலாளரிடம் இது தொடர்பில் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. பிரதமர் செயலாளருக்கு ஊடாக இது நடந்துவிட்டால் இப்போது ஏற்படுகின்ற சூழல் ஏற்பட்டுவிடும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் எனக்கு இரு வாரம் கேட்டுள்ளார்கள். அனந்தி சசிசதரனுடைய வழக்கம்பராய், பண்ணாகம், சுழிபுரம் என்கின்ற முகவரிக்கு ஒரு கைத் துப்பாக்கி கெடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் இவ்வாறான விடங்களை போலியான பொய்யாக முன்வைக்கவிலை. எங்களுக்குக் கிடைத்த அடிப்படை ஆதரங்களோடு பேசுகின்றோம்.

இதுகுறித்த தகவல்களை அறிய முற்பட்ட சந்தர்ப்பத்திலே 2013ம் ஆண்டு தேர்தல் காலத்திலே திட்டமிட்டவகையில் எமது எதிரிகளினால் யாழ்ப்பாணத்திலே மேற்கொள்ளப்பட்ட பெண் வேட்பாளர் மீதான தாக்குதல்கள், பெண் வேட்பாளரை மையப்படுத்திய போலியான உதயன் பத்திரிகை வெளியீடு எனத்தொடங்கி இன்றுவரை பல்வேறு விடயங்களை எமது எதிரிகளின் முகவர்கள் எவ்வாறு காய்களை நகர்த்துகின்றார்கள்.

தமிழ் மக்களின் உரிமைக்கான ஜனநாயக ரீதியான போராட்டங்களை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை எவ்வாறு உள்ளுக்குள் இருந்து இயக்குகின்றார்கள்; என்கின்ற பல்வேறு விடயங்கள் வெளிப்பட்டு நிற்கின்றன.

எமது மக்களைப் பலவீனப்படுத்தும் எதிரிகளின் நிகழ்ச்சி நிரல்கள் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன.

அதற்குத் துணைபோகும் எம்மவர்களின் செயற்திட்டங்களையும் எமது மக்களும் நம்பி ஏமாற்றமைடைந்து கொண்டேயிருக்கின்றார்கள். என்று கூறி நிறைவு செய்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.