பீனிக்ஸ் பறவையாய் விஸ்வரூபம் எடுத்த தமிழ் இளைஞன்! சர்வதேசத்தை மிரட்ட வரும் யாழ் மைந்தன்

வடக்கிலிருந்து போர் மேகங்கள் நகர்ந்து சென்றாலும், மக்களின் மனங்களில் அது கொடுத்த ரணங்கள் இன்னமும் மாறவில்லை.

இழப்புக்களோடும் வலிகளோடும், வாழும் சமூகத்தில் இளைய தலைமுறையினரின் கனவுகளுக்கும் அவை தடையாகிக் கொண்டிருக்கின்றன. அத்தகு தடைகளை உடைத்து வெளியே வரத் துடிக்கும் நமது அடுத்தடுத்த தலைமுறையினருக்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகத் தான் கிடைக்கின்றன.

பொதுவாக இலங்கை கிரிக்கெட் தேசிய அணியில் தமிழ் வீரர்கள் இல்லாமல் இருப்பது அல்லது உள்வாங்கப்படாமல் இருத்தல் எமக்கான வெற்றிடத்தை எப்பொழுதும் காட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த வெற்றிடத்தை நிரப்பும் கனவோடு களம் கண்டு வெற்றிப் பாதையில் பயணிக்கிறான் யாழ்.மத்திய கல்லூரி மாணவன் வியாஸ்காந்.


மாகாண அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஒருநாள் தொடரில் வடமாகாண அணிக்காக திறமையை வெளிப்படுத்திய வியாஸ்காந், அடுத்து இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான தொடருக்கு தெரிவு செய்யப்பட்டு விளையாடி வருகிறார்.

தமிழ் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றாய் மிளிரத் தொடங்கியிருக்கும் வியாஸ்காந்தோடு பேசினோம்.

”என்னுடைய இந்த வெற்றிக்கு யாழ். மத்திய கல்லூரிக்கு பெரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். என் திறன் கண்டு, அதற்கு ஏற்றால் போல பயிற்சிகளை எடுத்துக் கொள்வத்கு என் பள்ளிக்கூடம் பெரும் உதவியாக இருந்தது.

அதேபோன்று என் குடும்பத்தை குறித்துப் பேசியாக வேண்டும். அவர்கள் கொடுக்கும் ஆதரவும், ஊக்குவிப்பும் இல்லையென்றால் என்னால் இவ்வளவு தூரம் வரை செல்ல முடிந்திருக்காது.

என்னுடைய சகோதரர்களும் பயிற்சிக்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டு இந்தளவு தூரம் நான் வந்திருக்கிறேன்.

வழமையாக அனைத்துப் போட்டிகளும் நன்றாக என்னுடைய திறனை வெளிப்படுத்துவேன். வடக்கின் பெரும் போர் என்று வர்ணிக்கப்படும், மத்தியகல்லூரி எதிர் பரியோவான் கல்லூரிகளுக்கிடையில் நடந்த சமர் போட்டிகள் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

அந்தப் போட்டிகளில் ஓரளவுக்கு என் திறனை வெளிப்படுத்தி கல்லூரி வெற்றிக்கு என் பங்கும் இருந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். அந்தப் போட்டியில் இரு இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளையும், 36 ஓட்டங்களையும் பெற்றேன்.

தொடர்ந்து மாகாண மட்டப் போட்டிகள் சவாலாக இருந்தன. அந்தப் போட்டிகளில் விளையாடுவதற்கு அதிகளவான பயற்சிகளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. வட மத்திய, வட மேல் மாகாணங்களுக்கிடையிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக 19வயது தேசிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொண்டேன்.

சாதாரணமாக எமது மைதானங்களில் விளையாடி விட்டு பெரும் மைதானங்களில் விளையாடுவதென்பது கடினமான ஒன்று. இதற்கு அதிகளவான பயிற்சிகள் தேவை என்பதை உணர்ந்தேன்.

எமது மாகாணங்களில் பல இளைஞர்கள் மாணவர்கள் விளையாடும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான வாய்ப்புக்கள், வசதிகள் இடம் கொடுப்பதில்லை. அந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.” என்று கூறுகிறார் வியாஸ்காந்.

எங்கள் பிள்ளையின் வெற்றிப் பாதையை எண்ணிப் பெருமை கொள்கிறோம் என்கிறார்கள் வியாஸ்காந்தின் பெற்றோர்கள். சிறு வயதிலிருந்தே அவன் பந்தோடு தான் இருப்பான். அவனுக்கான தடைகளை நாங்கள் விதித்ததில்லை. பாடசாலை அணியில் சேர்ந்து விளையாடுவதற்கும் அடம்பிடித்துக் கொண்டான்.

தேசிய அணியில் விளையாடிய முதலாவது யாழ். வீரர் என்ற பெருமையை அவன் பிடித்திருப்பது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவனின் அடைவு மட்டத்தை எண்ணி பெரும் மகிழ்ச்சியடைகின்றோம் என்கிறார்கள் பெற்றோர்கள்.

பதினாறு வயதேயான விஜயகாந்த் வியாஸ்காந் யாழ். மத்திய கல்லூரியே தன்னை அடையாளப்படுத்தியதாக குறிப்பிடுகிறான். தனக்கு பயிற்சி கொடுத்த சிறு வயது- ராஜதுரை வினோத்குமார் தற்போது- சந்திரமோகன் சுரேஷ்மோகன் ஆகிய பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறான்.

தன்னுடன் சேர்ந்து விளையாடிய சக வீரர்கள், மாணவர்களை நினைவுபடுத்தும் வியாஸ்காந், முதலாவது சர்வதேசப் போட்டியில் முதலாவது இன்னிங்ஸ் 21 ஓவர் 94 ரண் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருக்கிறான். துடுப்பாட்டத்தில் 3 ரண் (17 பந்துகள்). இரண்டாவது இன்னிங்ஸ் ; துடுப்பாட்டம் 16 ரண்(32பந்துகள்). களத்தடுப்பு – ஒரு ரண் அவுட். எடுத்திருக்கிறான்.

இலங்கையின் தேசிய அணியில் விளையாடி பெரும் சாதனைகளை படைப்பது தனது கனவு என்று கூறும் வியாஸ்காந்திற்கு வாழ்த்துக்கள்.

வடக்கு கிழக்கிலிருந்து தேசிய அணிகளுக்கு தெரிவாகும் வாய்ப்புக்களை பெற இருக்கும் இன்னும் பிற எமது இளைய தலைமுறை வீரர்களுக்கு வியாஸ்காந்தின் வெற்றிப் பயணம் முன்னுதாரணமாக அமையட்டும்.

அழிவுகளில் இருந்து மீண்டெழும் ஒரு இனத்தின் வெற்றியென்பது ஒட்டுமொத்த இனத்தின் வெற்றியாகவும், அடையாளமாகவும் மாறும். இன்று பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வெற்றிப் பாதையில் பயணிக்கும் எம் அடுத்த தலைமுறையினரின் வெற்றி என்பது மகத்தானது. வரலாற்றில் பதியப்பட வேண்டியது.

அத்தகு பாதையில் பயணிக்கும் வியாஸ்காந் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி மற்றைய அணிகளுக்கு மிரட்டலாய் அமையட்டும். அவன் வழி தேசிய அணியில் தமிழ் இடம் மீண்டும் பிடிக்கட்டும்.