புலிகளின் கணக்கில் பாலகுமாரன் இறந்தது 2009 ஏப்ரலில்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 05

பீஷ்மர்

பாலகுமாரன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து செல்வதென எடுத்து முடிவு சாதாரணமானதல்ல. அது தனி பாலகுமாரன் என்ற நபர் தப்பித்து செல்லும் சம்பவமுமல்ல. இனி விடுதலைப்போராட்டத்தின் ஆயுதவழி சாத்தியமல்ல என அவர் உணர்ந்ததாலும் இருக்கலாம். 1990 ஆம் ஆண்டு தொடக்கம் விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்து, புலிகளின் எல்லா சரிகள், தவறுகளிலும் தார்மீக ரீதியில் பொறுப்புகூற வேண்டியவராக இருந்துவிட்டு, 26 ஆண்டுகளின் பின்னர் புலிகளை விட்டு தப்பிச் செல்வதென்று ஒரு பெரு வீழ்ச்சி.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லலாம்.

1970களில் மத்தியிலிருந்து பல்வேறு இயக்கங்கள் தோற்றம் பெற்றன. எல்லாவற்றினது இலக்கும் தமிழீழம்தான். இப்படி தோன்றிய இயக்கங்களின் எண்ணிக்கை 33- 40 வரையானது. இதில் மிகச்சிறியனவற்றில் தொடங்கி விடுதலைப்புலிகள், புளொட், ரெலோ, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ் வரையான பெரிய இயக்கங்கள் வரை அடக்கம்.

இந்த இயக்கங்களில் பல அழிந்தன. கொள்கையை கைவிட்டன. தலைவர்கள் இறந்தார்கள். அரசுடன் இணைந்தன. எனினும், இறுதிவரை தமிழீழம் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தது புலிகள். அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன்.

மற்ற எல்லா இயக்கங்களும் தமிழீழ கோரிக்கையை கைவிட, பிரபாகரன் மட்டும்தான் அதில் உறுதியாக இருந்தார். தான் முன்மொழிந்த இலட்சியத்தை ஏற்று, தன்னை நம்பி இறந்த போராளிகளிற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்.

பாலகுமாரன் விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்தது தமிழீழ இலட்சியத்தை ஏற்றுத்தான். அவர் ஒரு நபரல்ல. ஈரோஸ் இயக்கத்தின் தலைவர். பாலகுமாரனும் தமிழீழ இலட்சியத்தை கைவிடாமல் இருந்தார் என்ற வரலாறு, 2009 ஏப்ரல் மாதத்துடன் முடிந்தது- பாலகுமாரன் விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு தப்பிச் செல்தென எடுத்த முடிவுடன். தமிழீழ கொள்கையில் எந்த சமரசமுமில்லாமல் இறுதிவரை போராடிய ஒரே தலைவர் பிரபாகரன்தான்.

பாலகுமாரன், மனைவி இந்திரா, மகன் சூரியதீபன், மகள் மகிழினி ஆகியோர் மேலும் சிலருடன் தப்பிச் சென்ற படகை கடற்புலிகளின் காவல் அணியொன்று மடக்கிப்பிடித்ததை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். அந்த சமயத்தில் படகில் இருந்தது சாதாரண பொதுமக்கள் என்றால் நிலைமை வேறு. இரண்டாவது பேச்சிற்கு இடமில்லாமல் அவர்களை கரைக்கு கொண்டு வந்து தண்டனை வழங்கியிருப்பார்கள். ஆனால் படகிலிருந்தது பாலகுமாரனும் குடும்பமும். தம்மை தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்குமாறு படகிலிருந்தவர்கள் உருக்கமாக கேட்டுக் கொண்டனர்.

இந்த சூழ்நிலையில் என்ன முடிவெடுப்பதென தெரியாமல் விழித்த கடற்புலி போராளிகள், உடனடியாக கரையிலிருந்த கட்டளை மையத்தை தொடர்பு கொண்டனர். விபரத்தை கேட்டு, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கட்டளை மையம் கடற்புலிகளின் தளபதி சூசையை தொடர்பு கொண்டது.

ஏப்ரல் மாதம் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தை எட்டி, விடுதலைப்புலிகளின் தளபதிகளிற்கு அதிக நெருக்கடியை கொடுத்திருந்தது. இப்படியான சூழலில் கோபமான அதிரடி முடிவுகளைத்தான் தளபதிகள் எடுப்பார்கள். சூசையிடம் விடயத்தை சொன்னதும், சம்பவ இடத்திலுள்ள போராளிகளின் இணைப்பை ஏற்படுத்தி தரச் சொன்னார். கட்டளை மையமும் விரைவாக தொடர்பை ஏற்படுத்தி கொடுத்தது.

சூசையை அறிந்தவர்களிற்கு தெரியும் அவரது கோபம். இயக்க வேலைகளில், களமுனைகளில் யாராவது தவறுவிட்டால் அவரது கதி அதோகதிதான். அதுபற்றிய விசாரணை நடக்கும்போது, அவரது கையில் என்ன பொருள் இருக்கிறதோ அந்தப்பொருளால் தவறிழைத்தவரிற்கு சாத்துப்படி நடக்கும்.

தப்பிச்சென்றவர்களின் படகை வழிமறித்த அணியின் பொறுப்பாளரை சூசை நேரடியாக வோக்கி டோக்கியில் தொடர்பு கொண்டார். “தப்பிச் சென்ற படகொன்றை துரத்திப் பிடித்தோம். அதிலிருப்பது பாலகுமாரன். அவர்களை என்ன செய்யலாம்“ என கடலிலிருந்து கேட்டார்கள். இந்த உரையாடல்களை பாலகுமாரனும் தெளிவாக கேட்டுக் கொண்டிருந்தார்.

“இயக்கத்தில் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான். எமது பகுதியை விட்டு வெளியேற மக்கள், போராளிகளிற்கு கட்டுப்பாடு இருந்தால் அது நான் உட்பட அனைவருக்கும் பொருந்தும். அவர்களை கரைக்கு கொண்டு வாருங்கள்“ என கடும் தொனியில் உத்தரவிட்டார்.

பாலகுமாரன் எதுவும் பேசாமல் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தார். மகள் மகிழினிதான் பெரிதாக சத்தமிட்டு அழுதபடியிருந்தார். அதன் பின்னர்தான் போராளிகளும் கவனித்தார்கள். படகை துரத்திச் சென்று சுட்டதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. கையொன்றில் தோள்மூட்டிற்கும் முழங்கைக்கும் இடைப்பட்ட பகுதி எலும்பை உடைத்துக் கொண்டு ரவையொன்று சென்றிருக்கிறது.

அவர்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டு வீடுகளிற்கு அனுப்பப்பட்டார்கள். அதன் பின்னர், மே 17ம் திகதி புலிகள் அமைப்பு முழுமையாக சிதறும்வரை அமைப்பு சார்பில் யாருமே அவரை தொடர்பு கொள்ளவில்லை. புலிகளை பொறுத்தவரை ஏப்ரல் மாதத்திலேயே பாலகுமாரன் இறந்து விட்டார்.

மே 17ம் திகதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் வரையிலும் முறையான மருத்துவ வசதிகள் இல்லாமல் மகிழினி சிரமப்பட்டார். பாலகுமாரனின் மனைவி மருத்துவதாதியென்பதால் ஓரளவு சமாளித்துக் கொண்டிருந்தார். பின்னர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்ததன் பின்னர்தான் முறையான சிகிச்சையளிக்கப்பட்டது. கை எலும்புகள் பொருந்த “அன்ரனா“ பொருத்தப்பட்டது. அன்ரனாவுடன்தான் யாழில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதினார். அன்ரனாவுடன்தான் பின்னர் இலங்கையை விட்டு வெளியேறினார்.

விடுதலைப்புலிகளின் இயல்பு அது. தமது கொள்கையில் மிக உறுதியாக இருப்பார்கள். கொள்கை மாத்திரம்தான் முதன்மையானது. ஆசாபாசம், குடும்பம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். இந்த இயல்புகளுடன் கூட வருபவர்கள் வரலாம். பின் தங்குபவர்கள் சென்றுவிடலாம் என்பதுதான் சொல்லாமல் சொல்லும் சங்கதி.

1987 யூலை 27 இல் இந்திய இலங்கை உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. சில மாதங்களிலேயே முறிந்து 1987-10.10 இல் புலிகள்- இந்தியா மோதல் ஏற்பட்டது.

ஒப்பந்தம் நெருக்கடி நிலையை எட்டிய சமயம். முல்லைத்தீவு தளபதியாக இருந்த மேஜர் பசீலனின் ஏற்பாட்டில் மணலாற்று காட்டுக்குள் முகாம் அமைத்து பிரபாகரன் அங்கு செல்ல தயாராகிறார். அதாவது இந்தியாவுடன் போர் என்ற முடிவை எடுக்கிறார்.

இந்தியா உலகின் நான்காவது வல்லரசு. இலங்கைக்கு வந்த இந்திய படையணியே கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம். விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை சில நூறு. இந்த சூழலில் போர் ஏற்பட்டால் என்ன நடக்கும்? எல்லோரும் நினைப்பதை போலத்தான் அப்போதைய இந்திய தூதர் டிக்சிற்கும் நினைத்தார். “சாரம் கட்டிய சில பொடியளை ஒரு சிகரெட் பற்றி முடிப்பதற்குள் நசித்துவிடுவோம்“ என்றார்.

விடுதலைப்புலிகளிற்குள்ளும் அந்த குழப்பம் இருந்தது. இந்தியாவுடன் போர் நடந்தால் அழிந்து விடுவோம் என்று பயந்தார்கள். அமைப்பிற்குள் குழப்பம் ஏற்பட்டதை அறிந்த பிரபாகரன், போராளிகளை அழைத்து, பேசினார். அதில் அவர் சுருக்கமாக சொன்னது இதுதான்- “இந்தியாவுடன் போரிடுவதென முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவில் உடன்பாடில்லாதவர்கள் தாராளமாக ஒதுங்கிக்கொள்ளலாம். உடன்படுபவர்கள் என்னுடன் இருங்கள்“. சில போராளிகள் வெளியேறினார்கள். அவர்களில் முக்கியமானவர் காக்கா.

காக்கா இயக்கத்தின் மூத்தபோராளி. புலிகளின் முதல் பெரும் தாக்குதலான திருநெல்வேலி கண்ணிவெடி தாக்குதலில் பங்குபற்றியவர்களில் இன்றும் உயிருடன் உள்ள ஒரேநபர்.

(தொடரும்)
நன்றி : தமிழ் பக்கம் (மூலம்)

Get real time updates directly on you device, subscribe now.

You might also like