மது விருந்தில் கலந்து கொண்ட இளைஞன் அடித்துக்கொலை: வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவில் மது விருந்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மாதர்பனிக்கர் மகிழங்குளம் பகுதியை சேர்ந்த ஜெயசிங்கம் நிரோஜன் என்ற 26 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யபட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) அப்பகுதியில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டஇளைஞர் மது அருந்தியதுடன், மாலை 5.30 மணியளவில் மயக்கமான நிலையில் குறித்த இளைஞனை அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்து அவரது வீட்டினுள் கிடத்திவிட்டு சென்றுள்ளனர்.

வழமை போன்றே குறித்த நபர் மது அருந்துவதனால் அவரது மனைவி அதனை சிறுவிடயமாக எண்ணியதுடன், நீண்ட நேரமாகியும் கணவன் மயக்கத்தில் இருந்து எழுந்திருக்காத நிலையில் சந்தேகமடைந்ததுடன் உறவினர்களுக்கும் தகவல் வழங்கியிருந்தார்.

உறவினர்கள் வந்துபார்த்தபோது அவரது வாய்ப்பகுதியில் இரத்தம் காணப்பட்டுள்ளது. இதனால் இரவு 8 மணியளவில் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

எனினும் குறித்த இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று(புதன்கிழமை) மாலை வவுனியா மாவட்ட மேலதிக நீதிவான் சடலத்தை பார்வையிட்டதுடன், மாதர்பனிக்கர் மகிழங்குளம் பகுதியிலுள்ள அவரது வீட்டையும் பார்வையிட்டிருந்தார். அத்துடன் விரைவாக சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சமர்பிக்கப்பட்ட சட்ட வைத்திய அறிக்கைக்கு அமைய, இளைஞனின் உடலில் அடிகாயங்கள் காணப்பட்டதுடன், தலையின் பின்பகுதியில் பெரிய காயம் ஏற்பட்டு நரம்பு வெடித்தமையாலேயே இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இளைஞனின் தந்தை கூறும்போது, ‘நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்ற விருந்துபசார நிகழ்வின் பின்னர் மோதல் ஏற்பட்டதாகவும், தனது மகனை மது போதையில் சிலர் தாக்கியதாகவும் அதனாலேயே அவர் உயிரிழந்திருப்பதாகவும் பின்னர் வீட்டில் கொண்டுவந்து விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.