நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கலகொட ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறை!!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டமா அதிபர் இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று (08) அறிவிக்கப்பட்டது.

தற்போது ஶ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஞானசார ​தேரரை உடனடியாக சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டுமென இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி பீ. பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் 4 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகளிற்கு அமைய 19 வருட கால சிறைத்தண்டனையை விதித்த நீதிமன்றம், அதனை 6 வருடங்களில் கழிக்க வேண்டுமென நிபந்தனையளித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு 2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்துக்குள் அத்துமீறி பிரவேசித்தமை, நீதிமன்ற செயற்பாடுகளில் முறையற்ற ரீதியில் தலையீடு செய்தமை, முறைப்பாட்டை வழிநடத்திய அரச சிரேஷ்ட சட்டத்தரணியை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.