மாணவி வித்தியா படுகொலை விவகாரம்: மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் மேன்முறையீடு – டிசம்பர் மாதம் விசாரணைக்கு

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தி யாவை கொலை செய்தமை தொடர்பில் மரணதண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறை யீட்டு மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி விசார ணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வணசுந்தர, நளின் பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில், இந்த மேன் முறையீட்டு மனு நேற்று முதல் தடவையாக விசாரணைக்கு வந்த போதே, டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மேன் முறையீட்டை ஆராய நீதியர்சர்கள் தீர்மானித்தனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி யாழ். புங்குடுத்தீவை சேர்ந்த குறித்த மாணவி பாடசாலை செல்லும் போது கடத்தி செல்லப்பட்டு கூட்டு பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந் நிலையில் மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் பலாத்காரம் , கொலை வழக்கில் 7 குற்றவாளிகளுக்கு ட்ரயல் எட் பார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி கடந்த 2017.செப்டம்பர் 27 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் இவ் வன்புணர்வுக் கொலையின் சூத்திரதாரியாகிய சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமாரும் ஒருவராவார்.

இவர் இந்த வன்புணர்வு சம்பவத்தை வீடியோ மூலமாக வெளிநாட்டுக்கு அனுப்பியிருந்தார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இந்த வன்புணர்வுக் கொலைச் சம்பவம் சர்வதேச ரீதியில் திட்டமிடப்பட்டுள்ளது என சட்டமா அதிபர் சார்பில் ட்ரையல் எட் பார் விசாரணையின் ஆரம்ப தினத்தன்று நீதிபதிகளின் முன்னிலையில் ஆஜரான அப்போதைய பதில் சட்டமா அதிபரும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுமான ஜனடஹிபதி சட்டத்தரணி டபிள்யு.டி.லிவேரா குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் 300 பக்கங்களுக்கு மேற்பட்ட தீர்ப்பில், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரஹாசன், சிவதேவன் துஷயந்த், ஜெயதரன் கோகிலன், சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகிய ஏழுபேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இந்த ஏழு பேரும் நேற்று உயர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். இந் நிலையிலேயே அவர்களது மேன் முறையீடு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்ப்ட்டது.

முன்னதாக வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் தற்போதைய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியுமான பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் தற்போதைய யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியுமான அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் தற்போதைய திருமலை மேல் நீதிமன்ற நீதிபதியுமான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ட்ரயல் அட் பார் விசாரணை நடைபெற்றிருந்தது.

இதன்படி மொத்தமாக குற்றச் சாட்டப்பட்ட ஒன்பது சந்தேகநபர்களில் இருவர் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்ட நிலையில் மேற்படி ஏழு பேருக்கும் கடந்த வருடம் ட்ரயல் எட் பார் நீதிமன்றால் மரண தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டிருந்தது.

மேலும், 30 வருடங்களுக்கும் குறையாத சிறைத்தண்டனையும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாருக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டிருந்ததுடன் தலா 40,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் 5 குற்றவாளிகளுக்கும் தலா 70,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் என ஏனைய இரண்டு குற்றவாளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தீர்பளிக்கப்பட்ட அவ் ஏழு குற்றவாளிகளும் தமக்கு எதிரான தண்டனையை எதிர்த்து தமது தரப்பு சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்திருந்தனர்.

இதன்போது ஏற்கனவே வித்தியா படுகொலை வழக்கினை ட்ரயல் எட் பார் நீதிமன்றில் நெறிப்படுத்திய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் குமார்ரட்ணம் முன்னிலையாகியதுடன் குற்றவாளிகள் தரப்பில் சிரேஷ்ட சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன உள்ளிட்ட சட்டத்தரனிகள் முன்னிலையாகினர்.