முதலமைச்சர் பதவிவிலகுகிறார்?: நெருக்கமானவர்களுடன் தீவிர ஆலோசனை!

வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பதவியிலிருந்து விலகுவது குறித்து தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசித்து வருகிறார். கடந்த இரண்டு தினங்களாக இந்த ஆலோசனைகள் நடந்து வருகின்றன. டெனீஸ்வரனின் மூலம் தமிழரசுக்கட்சி கொடுக்கும் அழுத்தங்களையடுத்தே, இந்த ஆலோசனைகள் நடந்து வருவதாக தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க இப்போதைக்கு முதலமைச்சர் பதவியை துறப்பதும் ஒரு வழியென முதலமைச்சருக்கு நெருக்கமான சட்டதரணிகள் வட்டத்திலிருந்து ஆலோசனை வழங்கப்பட்டதையடுத்தே, இந்த ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மூலம், விக்னேஸ்வரனிற்கு பொறி வைப்பதற்கு தமிழரசுக்கட்சியின் ஒரு அணி முயற்சிப்பதாக அந்த ஆலோசனை கூட்டங்களில் பேசப்பட்டுள்ளது. அடுத்த மாகாணசபை தேர்தல் குறித்த இணக்கப்பாடு ஒன்றை எட்டும் பட்சத்தில் டெனீஸ்வரன் வழக்கை விலக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதாக, தமிழரசுக்கட்சிக்கு நெருக்கமான சில தரப்புக்கள் ஏற்கனவே முதலமைச்சருக்கு கூறியிருந்த நிலையில், தனித்து களமிறங்கும் முடிவில் உள்ள முதலமைச்சர் டெனீஸ்வரன் விவகாரத்தில் தொடர்ந்தும் சட்டரீதியான சிக்கலை சந்திக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

மாகாணசபையின் ஆட்சிக்காலம் முடிவடையும் தறுவாயிலிருப்பதால், பதவிவிலகுவதால் எந்த பாதகமும் கிடையாது, அரசியல்ரீதியாக சாதகமான அம்சங்கள் உள்ளதாக அந்த சந்திப்புக்களில் முதலமைச்சருக்கு சிலர் ஆலோசனை வழங்கியதாக அறிய முடிகிறது.

கொழும்பு மற்றும் யாழ் பல்கலைகழகத்தின் சட்டபீடங்களை சேர்ந்த சிலரும் முதலமைச்சருடன் இந்த ஆலோசனையில் பங்கெடுத்துள்ளனர்.

எனினும், இன்று மதியம் வரை இந்த விவகாரத்தில் தெளிவான எந்த முடிவும் எடுக்கப்பட்டதாக அறிய முடியவில்லை. தொடர்ந்தும் அது ஆலோசனை மட்டத்திலேயே இருப்பதாக, சந்திப்பில் கலந்துகொண்ட ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

முதலமைச்சர் பதவிவிலகுவதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க முடியாதபோதும், அரசியல்ரீதியான வாய்ப்புக்கள் கிடைக்கலாமென முதலமைச்சர் தரப்பு எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like