புலிகளுக்காக டென்மார்க்கில் உண்ணாவிரதம் இருந்த எழுத்தாளர் யாழில் விகாரை அமைக்கும் பணியில் தீவிரம்

டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற பிரபல எழுத்தாளரான தமிழர் ஒருவர் யாழ். மாவட்டத்தில் தமிழ் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்குவதாக யாழ். நாக விகாரையின் பிரதம விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல தேரர் அடங்கலான பௌத்த பிக்குகளுக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார்.

மேலும், கன்பொல்லை கிராமத்தில் பௌத்த காங்கிரஸுக்கு சொந்தமான காணியில் விகாரை கட்டிக் கொடுப்பதாகவும் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

இறுதி யுத்தத்தை அரசாங்கம் கை விட வேண்டும் என்று கோரி புலிகளுக்கு ஆதரவாக டென்மார்க்கில் பிரபல எழுத்தாளர் உண்ணாவிரதம் இருந்து, போர் முடிந்த பின்னர் சமாதான தூதுவர் என்ற அடையாளத்துடன் தாயகம் வந்தார்.

தற்போது தாயகத்தில் தங்கி உள்ள இவர் அரசாங்க உயர் மட்டத்தினர், பிக்குகள் ஆகியோரை சந்தித்து பேச்சுகள் நடத்தி வருகின்றார்.

இவரை ஒரு தமிழ் பௌத்தர் என்று பிரகடனப்படுத்தி உள்ளார். இவ்வாறான முக்கிய சந்திப்புகளிலேயே கன்பொல்லை கிராமத்தில் விகாரை அமைத்து கொடுப்பார் என்று வாக்குறுதி கொடுத்து உள்ளார்.

கன்பொல்லை ஒரு காலத்தில் தமிழ் பௌத்த கிராமமாக விளங்கியது. இக்கிராமத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தினர் சாதி கொடுமை காரணமாக பௌத்தர்களாக மாறி இருந்தனர்.

குறிப்பாக வட மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டு இருந்தபோது கன்பொல்லை கிராமத்தில்தான் முதன்முதலாக தமிழ் பௌத்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

இது ஸ்ரீ நாரத தேரரின் உதவியுடன் அமைக்கப்பட்டதால் யாழ். கரவெட்டி ஸ்ரீ நாரத வித்தியாலயம் என்கிற பெயரில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.