அடங்க மாட்டோம்; பொலிசாருக்கு சவால் விட்ட யாழ் ரௌடிகள்!

யாழ்ப்பாணத்தில் கொக்குவிலில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்றிரவு புகுந்த ரௌடிக்கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தி, வீட்டு பொருட்களை அடித்துடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.

தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாடு செய்துள்ளார்.

கொக்குவில் சம்பியன் லேனில் நேற்றிரவு 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்த வீட்டில் மருத்துவர் வாடகைக்கு தங்கியுள்ளார்.

“3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டது. நால்வர் வீதியில் நிற்க இருவர் வீட்டுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். வந்தவர்களின் கைகளில் பொல்லுகள் உள்பட கூரிய ஆயுதங்கள் காணப்பட்டன.

வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உள்பட்ட வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து உடைத்துவிட்டு கும்பல் தப்பித்தது. வீட்டிலிருந்த எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை” என்று மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் பல வழிகளிலும் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் குற்றச்செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, நேற்று முன்தினம் சனிக்கிழமை தெரிவித்திருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like