வியாஸ்காந்தின் சிறப்பாட்டத்தோடு மாவட்ட கிரிக்கெட் தொடரில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி

யாழ் மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஒழுங்கு செய்து நடாத்திய 17 வயதின் கீழ்ப்பட்ட யாழ் மாவட்டத்தின் பாடசாலை அணிகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சென். ஜோன்ஸ் கல்லூரியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த முறையில் செயற்படும் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்றிருந்தது.

பிரியஞ்சனின் சதத்தோடு T20 லீக் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த தம்புள்ளை

ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வென்ற சென். ஜோன்ஸ் கல்லூரியின் அணித் தலைவரான C.P. தனுஜன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்புக்காக பெற்றுக் கொண்டார்.

முதலில் துடுப்பாடிய சென். ஜோன்ஸ் கல்லூரியின் இளம் வீரர்களுக்கு எதிர்பார்த்த ஆரம்பம் அமையவில்லை. அவ்வணியின் முதல் ஐந்து விக்கெட்டுகளும் 46 ஓட்டங்களுக்குள்ளேயே சரிந்தது. எனினும், ஆறாம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்த T. தினோஷன் மாத்திரம் ஆறுதல் அளிக்கும் விதமாக துடுப்பாட்டத்தில் செயற்பட்டார்.

தொடர்ந்து சென். ஜோன்ஸ் கல்லூரியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களும் மிகவும் மோசமாக செயற்பட அவர்கள் 35 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே குவித்தனர்.

சென். ஜோன்ஸ் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் தினோஷன் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்று, 3 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 47 ஓட்டங்களை குவிக்க ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரேனும் இருபது ஓட்டங்களைக் கூட பெறாது ஆட்டமிழந்தனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக அதன் அணித் தலைவர் K. இயலரசன் 4 விக்கெட்டுக்களையும், T. கனிஷ்டன் 3 விக்கெட்டுக்களையும், T. விதுஷன் மற்றும் இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணி வீரர் வியாஸ்காந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.

பின்னர் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 102 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி ஒரு கட்டத்தில் 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய போதிலும் மத்திய வரிசையில் களம் வந்த வியாஸ்காந்த் அதிரடியான முறையில் அரைச்சதம் கடந்தார்.

வியாஸ்காந்தின் அரைச்சதத்தின் உதவியோடு யாழ்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றி இலக்கை 23.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 105 ஓட்டங்களுடன் அடைந்தது.

இறுதி ஓவர் வரை போராடி காலிறுதிக்கு முன்னேறிய புனித அந்தோனியார்

யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் துடுப்பாட்டத்தில், அண்மையில் இந்திய கனிஷ்ட அணியுடனான இளையோர் டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேசத்திற்கு அறிமுகமாகிய வியாஸ்காந்த் இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்று 43 பந்துகளுக்கு 62 ஓட்டங்களை குவித்திருந்தார். வியாஸ்காந்த் தனது துடுப்பாட்ட இன்னிங்ஸில் 9 பெளண்டரிகளும், 2 சிக்ஸர்களையும் விளாசியிருந்தார்.

சென். ஜோன்ஸ் கல்லூரியின் பந்துவீச்சில் T. தினோஷன் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

சென். ஜோன்ஸ் கல்லூரி – 101 (35) – T. தினோஷன் 47*, K. இயலரசன் 11/4, T. கனிஷ்டன் 31/3

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – 105/5 (23.1) – வியாஸ்காந்த் 62*, T. தினோஷன் 49/3

முடிவு – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 5 விக்கெட்டுக்களால் வெற்றி