மைத்திரி, மஹிந்த, ஷிரந்தியைக் கொலை செய்ய சதி! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தனக்குத் தெரியும் என, நேற்று கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஊழல் எதிர்ப்பு அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவின் மாவனல்ல இல்லத்துக்கு அடிக்கடி வந்து சென்றார் என்ற சந்தேகத்தில் இந்தியர் ஒருவர் அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த சதித்திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுபற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

“நாமல் குமாரவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தொந்தரவு கொடுத்தார் என்று செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, மசூரி தோமஸ் என்ற இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பாதுகாப்புச் செயலரின் வழிகாட்டுதலின் அடிப்படையில், பயங்கரவாத தடைச்சட்ட விதிகளின் கீழ், குறித்த இந்தியர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

சந்தேகநபர் கடந்த பெப்ரவரி மாதம் கொழும்புக்கு வந்துள்ளார். தற்போது அவர் செல்லுபடியான எந்த நுழைவிசைவும் இன்றி ராகமவில் 2500 ரூபா வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து தங்கியிருக்கிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவரது மனைவி சிராந்தி ராஜபக்ச ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எந்த அமைப்பு அல்லது நபர்களால் அச்சுறுத்தல் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் அவரது வாக்குமூலத்தின் உண்மைத்தன்மை மற்றும் அவரது வருகையின் நோக்கம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.