‘நீங்கள் விரும்பினால் மஹிந்தவை நீக்குகிறேன்’: சஜித்திற்கு ஸ்கெட்ச் போட்ட மைத்திரி!

ஐதேக பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபாலவிற்குமிடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. கடந்த 30ம் திகதி இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அதுவரை தனது அரசியல் எதிரியாக இருந்த மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இது, மஹிந்த ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், ஒட்டுமொத்தமாக நாட்டு மக்களிடம் கலவையான உணர்வுகளையே ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி வாக்கெடுப்பிற்கு செல்லாமல் தடுத்தது, மோசமான குதிரை பேர அரசியலை வளர்க்க எடுக்கப்பட்ட முயற்சியென்றும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

மேற்குலக அழுத்தம், உள்ளூர் அதிருப்திகளையடுத்து வரும் திங்கட்கிழமை (05) நாடாளுமன்றத்தை கூட்ட ஜனாதிபதியை இணங்க வைத்திருக்கிறது. அன்றைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெறாத போதும், அடுத்து வரும் நாட்களில் வாக்கெடுப்பு இடம்பெறும் எனத் தெரிகிறது. இரண்டு முகாம்களிலும் இருந்தும் இன்னும் யார்யாரெல்லாம் தாவுவார்களோ என்ற எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நிலையில், மைத்திரி- சஜித் சந்திப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று மாலையிலிருந்து இந்த தகவல் வெளியாகி, ஐ.தே.க பிரதி தலைவரே, சு.கவின் வலையில் வீழ்ந்து விட்டாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், பிந்திக் கிடைத்த- நம்பகரமான மூலங்களில் இருந்து தமிழ்பக்கம் பெற்ற- தகவல்களை வாசகர்களிற்காக குறிப்பிடுகிறோம்.

இந்த சந்திப்பிற்கான அழைப்பை ஜனாதிபதி மைததிரிபாலவே விடுத்திருந்தார்.

சஜித் பிரேமதாசா, மைத்திரி சந்திப்பு மிகுந்த சினேகபூர்வமாக இடம்பெற்றது. ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி, மஹிந்தவை பிரதமராக்கியது ஏன் என மைத்திரி நீண்ட விளக்கமளித்திருந்தார். ஜனாதிபதி பகிரங்கமாக பேசிய கொலைச்சதி முயற்சி அல்லாமல், ரணில் விக்கிரமசிங்க தன்னை மதிக்காமல் தன்னிச்சையாக நடந்ததுதான் மைத்திரிபால முன்வைத்த பிரதான கோரிக்கை.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, பிறிதொருவரை பிரதமராக்கலாமென தான் சில மாதங்களின் முன்னரே ஐ.தே.க பிரமுகர்களுடன் ஜனாதிபதி பேசியிருக்கிறார். அந்த சமயத்திலும் சஜித் பிரேமதாசவுடன் இரகசியமாக பேசியிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அதை சுட்டிக்காட்டிய மைத்திரி, அதிருப்தி பல மாதங்களின் முன்னரே ஏற்பட்டு விட்டது, பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி உங்களிடமும் (சஜித்), கர ஜயசூரியவிடமும் பலமுறை வலியுறுத்தினேன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியா, “நீங்கள் பிரதமராக பதவியேற்க தயார் என்றால் சொல்லுங்கள், இந்த பிரச்சனையை அடுத்த கணமே முடிவிற்கு கொண்டு வரலாம். மஹிந்த ராஜபக்சவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு உங்களை பிரதமராக்குகிறேன்“ என மைத்திரிபால கேட்டார்.

எனினும், சஜித் பிரேமதாசா அதை மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் கட்சியின் தீர்மானத்தை பெறாமல் தன்னால் நடக்க முடியாதென கூறியுள்ளார்.

எனினும், இந்த சந்திப்பிற்கு சஜித் வந்த விவகாரம், வருவதற்கு முன்னரே ஐ.தே.க தலைமைக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.

சஜித்தை சந்திததற்கு பின்னர் தமிழ் பிரமுகர் ஒருவரையும் மைத்திரி சந்தித்திருந்தார். ஐ.தே.க தலைமைக்கு நெருக்கமானவர் அவர். சஜித்திடம் சொல்லப்பட்ட தகவல்களை அவரிடமும் கூறி, ஐ.தே.க அப்படியொரு முடிவெடுத்தால் பிரதமர் பதவியை தர தயாராக இருக்கிறேன் என்ற தகவலை அவர்களிடம் நீங்களும் தெரிவியுங்கள் என அந்த பிரமுகரிடமும் மைத்திரி கேட்டிருந்தார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தொலைபேசி அழைப்பேற்படுத்தி கோத்தபாயவுடன் கலந்துரையாடியிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

நன்றி : தமிழ் பக்கம்