மஹிந்தவுக்கு பிரதமர் ஆசனம் இல்லை! சபாநாயகர் விசேட அறிவிப்பு

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஐ.தே.கட்சி, த.தே.கூட்டமைப்பு, ம.வி.முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் 116 பேர் கையொப்பத்துடன், என்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நியாயமானது என தான் உணர்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே இதை தெரிவித்துள்ளார். தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாடு குழப்பநிலையை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில், இதுவரை காலமும் மௌனித்து இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கும் மனசாட்சியின் படி செயற்படுவதும் எனது தேசிய பொறுப்பு என்பதை நினைவுகூருகின்றேன்.

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடு எனத் தெரிவித்தும் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் 116 பேர் கையொப்பத்துடன், என்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நியாயமானது என நான் உணர்கின்றேன்.

நாடாளுமன்றத்தை சட்டரீதியாக கூட்டுவதற்கு இடமளிக்காமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பறித்துள்ளதாக பெரும்பாலானோர் தெரிவிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நியாயத்தின் அடிப்படையில் எனது நிலைப்பாட்டை உலகிற்கு எடுத்துரைப்பது அவசியமாகும்.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் அரசியலமைப்புக்கு முரணான, சம்பிரதாயத்திற்கு விரோதமானது என பெரும்பாலானோரின் நிலைப்பாடாக இருக்கும் நிலையில் புதிதாக ஒரு தரப்பினரால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான இயலுமை கிடைக்கும் வரை முன்னைய நிலையை ஏற்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனநாயக சமூகத்தில் இடம்பெறக்கூடாத இந்தச் சம்பவம், ஆயுதமின்றி மேற்கொள்ளப்பட்ட வெறுக்கத்தக்க செயல் என்பதை இறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவருக்கு பிரதமர் ஆசனத்தை வழங்குவதில்லை. மேலும் தற்போதைய அரசாங்க உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்வார்கள் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் புதிதாக நியமனம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது.

நவம்பர் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியை சந்தித்த போது, நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி தீர்வு காண்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை.

மாறாக மறுநாள் முற்பகல் 10.30 மணியளவில் தொலைபேசி ஊடாக அழைத்து, நாளை 7ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதாக உறுதியளித்திருந்தார்.

அன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்த ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த தூதுவர்களிடம் நவம்பர் மாதம் 5ஆம் திகதி என உறுதியளித்திருந்தார்.

அதேபோன்று மஹிந்த ராஜபக்ஸவும் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நெருக்கடியான நிலைமையில் ஜனாதிபதி வாய்மூலமான உறுதி மொழிக்கு அமைவாக 7ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டி அரசியல் நெருக்கடி காண்பதே சபாநாயகர் என்ற வகையில் எனது கடமையாகும்.

ஜனாதிபதி இதற்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். நாட்டில் ஜனநாயக மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது. அரச ஊடகங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் நிர்வாக கட்டமைப்பு பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் அரசியலமைப்புக்கு முரணானது என்பதோடு நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் எதிரானது.

இந்த நிலையில் புதிய தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை முன்னதான நிலைமையே கருத்தில் கொள்ளப்படும் என சபாநாயகரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.