யாழ்ப்பாண மக்களுக்கு எச்சரிக்கை!

யாழ். குடாநாட்டில் சட்டவிரோதமான முறையில் வகையில் குப்பைகளை கொட்டுவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண பொலிஸ்பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணகுலசூரிய அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண நகரத்தின் பிரதான வீதிகளான ஸ்டான்லி றோட், கே.கே.எஸ் வீதி மற்றும் பிரதான வீதி உட்பட பல்வேறு முக்கிய வீதிகளிலும் பொதுமக்களால் குப்பைகள் கொட்டப்படுவதை பொலிஸார் தடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களினால் குப்பைகள் பொருத்தமில்லாத இடங்களில் கொட்டப்படுவதற்கு, கழிவகற்றல் செயன்முறை உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படாமையே காரணம்.

கொழும்பு போன்ற நகரங்களில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்கென பிரத்தியேகமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியன பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு பொருத்தமான இடங்களை உடனடியாக அடையாளப்படுத்தி கொடுக்க வேண்டும்.

குப்பைகள் கொட்டுவதற்கு இடங்கள் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரும் பொதுமக்கள் வீதிகளில் குப்பைகளை கொட்டினால் பொலிஸார் உடனடியாக சட்டநடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.