இலங்கை அரச ஊழியர்களுக்கு சபாநாயகர் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார்.

நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

”மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும், நிறைவேற்று அதிகாரம் அபகரித்து, வருவதை நான் கடந்த இரண்டு வாரங்களாக அவதானித்து வருகிறேன்.

எனவே யாரிடம் இருந்து வந்தாலும், எநதவொரு சட்டவிரோத உத்தரவுகளையும் நிறைவேற்றாமல், நிராகரிக்குமாறு அனைத்து அரச பணியாளர்களிடமும் கோருகிறேன்.

நாடாளுமன்றத்தின் சட்டபூர்வதன்மையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது நடவடிக்கைகளின் மூலம் தடுத்துள்ள நிலையில், இந்த நடவடிக்கைகளின் சட்டபூர்வ தன்மை குறித்து உச்சநீதிமன்றமே முடிவு செய்யும்.

சிறிலங்கா அதிபர் உரையாற்றுவதை தடுக்க சபாநாயகர் திட்டமிட்டிருந்ததால் தான், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக, போலி வெளிவிவகார அமைச்சர் கூறியிருக்கிறார்.

தனது சகாக்களின் செயல்களுக்கு நேர்மையான நம்பத்தகுந்த காரணங்களை முன்வைக்குமாறு போலி வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகமவுக்கு கூற விரும்புகிறேன். இது உலக அரங்கில் எமது நாட்டின் மதிப்பை கேலிக்குரியதாக்கும்.

அவரது கூட்டாளிகள் பலர் என்னை சிறைக்கு அனுப்பப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர், ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக எந்தவொரு விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.