மைத்திரியின் ஜனாதிபதி பதவியை பறிக்க திட்டமிடும் ரணில் தரப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றிரவு நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்ததது.

இதனை அடுத்து, அவருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரும் முனைப்புகளை ஐக்கிய தேசிய முன்னணி தீவிரப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று மைத்திரிபால சிறிசேன பிடிவாதமான நிலைப்பாட்டில் இருப்பதால், ஐக்கிய தேசிய முன்னணி வெறுப்படைந்துள்ளது.

இனிமேல் அவரைச் சந்திக்கப் போவதில்லை என்றும், அவரைச் சந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும், நேற்றைய சந்திப்புக்குப் பின்னர் ஐதேக தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியெல்ல கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் கடும்போக்கு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை கொண்டு வரும் முனைப்புகளில் ஐதேக தீவிரமாக ஈடுபடும் வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

எனினும், தற்போது, ஐக்கிய தேசிய முன்னணிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி தவிர, 103 உறுப்பினர்களின் ஆதரவே உள்ளது.

குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டோம் என்று கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பின் போது, ஜனாதிபதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதி அளித்துள்ளது.

இந்த நிலையில், ஐதேமு குற்றவியல் பிரேரணையை கொண்டு வந்தாலும், அதனை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவையே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like