ரணிலின் அதிரடி; ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆபத்து!

சிறிலங்காவின் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க, தனது அரசாங்கம் ஊழல் மோசடிகளுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்தும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி முன்னிலையில் டிசெம்பர் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் ந்தாவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் வைத்து மாலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே இந்த உதத்தரவாதத்தை வழங்கியிருக்கின்றார்.

“ கடந்த மூன்றரை வருட நல்லாட்சியில் நாம் விதைத்தவற்றின் பலன்களை இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவிக்கின்றது. அவை மகிழ்ச்சிக்குறிய விடையங்கள். எனினும் எம்மால் செய்ய முடியாத விடையங்களும் இருக்கின்றன. சில பணிகள் மந்த கதியை அடைந்தன. சில பணிகளை பூர்த்திசெய்ய முடியாது போனது. எனினும் எமது அர்ப்பணிப்பும், விருப்பமும் இருக்கின்றது. நாம் எமது குறைப்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்வோம். விசேடமாக ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவோம். அனைத்து இன சூழலை மக்களும் நல்லிணக்கத்துடனும், ஒற்றுமையுடனும் வாழக்கூடிய நாம் எற்படுத்தினோம். நல்லிணக்கத்திற்காகவும், சாமாதானத்திற்காகவும் நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்”.

ஒக்டோபர் 26 ஆம் திகதி அதிரடியாக பிரதமர் பதவியில் இருந்த நீக்கக் காணரமாக அமைந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறைமையையும் இல்லாதொழிப்பதாகவும் ரணில் தெரிவித்தார். இதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்கனவெ ஆரம்பித்துள்ளதாக உறுதிப்படுத்திய பிரதமர் ரணில், இன்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் இந்தக் கலந்துரையாடல்கள், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் நடத்தப்படும் என்று பெயர் குறிப்பிட்டு கூறிய ரணில், மைத்ரி தலைமையிலான சுதந்திரக் கட்சியையும், மஹிந்த தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெயரையும் குறிப்பிடாது தவிர்த்துக்கொண்டார்.

“தற்போது நாம் முன்னோக்கி செல்ல வேண்டியது அவசியம். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நாம் ஏற்கனவே ஆரம்பித்திருக்கின்றோம். அரசியல் கட்சிகள் பலவற்றுடன் இந்த விவகாரம் குறித்து கலந்தரையாடினோம். அதேபோல் ஒற்றையாட்சியான சிறிலங்காவிற்குள் அனைத்து இன மக்களுக்கும் நியாயத்தை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும், ஜே.வி.பி யுடனும் கலந்துரையாடுவோம்”.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நாட்டை சமஷ்டி ஆட்சி முறைமையை உள்ளடக்கிய வகையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கியுள்ளதாக குற்றம்சாட்டிவரும் மஹிந்தவின் சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சிறிலங்கா சதந்திரக் கட்சியினர், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ரணில் நாட்டை பிளவுபடுத்தப் போவதாக சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

இதேவேளை 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் ரணில் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தத்தை போன்று இம்முறையும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தமொன்றை செய்துகொண்டுள்ளதாக ஆட்சிக் கவிழ்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியாது போன மஹிந்தவாதிகளும், மைத்ரியில் தரப்பிலுள்ள மஹிந்தவாதிகளும் குற்றமச்சாாட்டி வருகின்றனர்.

இந்தக் கருத்தை இல்லாத பிரதமர் பதவியிலிருந்து டிசெம்பர் 15 ஆம் திகதி விலகுவதாக அறிவித்த மஹிந்த ராஜபக்சவும் குறிப்பிட்டிருந்ததுடன், ரணில் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிடுக்குப் பிடியில் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2005 ஆம் ஆண்டு தாய்நாட்டிற்காக தான் ஜனாதிபதித் தேர்தலையே அர்ப்பணித்ததாக கூறியதுடன், தாய்நாட்டிற்காக எதனையும் இழக்கத் தயார் என்ற நிலையில், இவ்வாறான குற்றச்சாட்டுக்களில் அடிப்படையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்காக நாட்டை பிளவுபடுத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக்கொள்ள நான் செல்லவில்லை. அன்று நான் எனது தாய் நாட்டிற்காக ஜனாதிபதி தேர்தலை அர்ப்பணித்தேன். இன்றும் நான் எனது அந்த நிலைப்பாட்டில் மாறவில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பலமான கூட்டணியொன்றை எதிர்காலத்தில் உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். எதிர்கால சந்ததியினருக்கு அச்சமின்றி தலை நிமிர்ந்து சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.

இதனை மக்களின் கருத்துகளுக்கு செவி சாய்க்கும், அனைவரினதும் உரிமைகளை பாதுகாக்கும், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்ட சூழலால் மாத்திரமே இவற்றை உறுதிப்படுத்த முடியும். எந்தவொரு நிலையிலும், எந்தவொரு காரணத்திற்காகவும், மிதித்து நசுக்கக்முடியாத வகையில் ஜனநாயகத்தை நாம் உறுதிப்படுத்த நாம் முயற்சிப்போம். அவ்வாறான சிறிலங்காவையே நான் எதிர்பார்க்கின்றேன். நீங்களும் அதனையே எதிர்பார்க்கின்றீர்கள். அதனால் முரண்பாடுகளை புறந்தள்ளிவிட்டு எமது தாய் நாட்டிற்காகவும், ஜனநாயகத்திற்காகவும், மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு, சுதந்திரமான நாட்டை கட்டியெழுப்ப இந்த பரந்துபட்ட பொதுக் கூட்டணியுடன் கைகோர்த்துக்கொள்ளுமாறு நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.