வவுனியாவில் நள்ளிரவில் பதற்றம்! ஒன்றுகூடிய பொதுமக்கள்

வவுனியாவில் இன்று நள்ளிரவு பொலிஸாரின் செயற்பாட்டால் நபர் ஒருவர் குடியிருப்பு குளத்தில் வீழ்ந்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குளக்கட்டு பகுதியில் ஒன்று திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகில் உள்ள விருந்தினர் விடுதியில் மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த இரு இளைஞர்களும் பொலிஸாரின் கட்டளையைத் தாண்டி முன்னோக்கி பயணித்ததன் காரணமாக அவர்களை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் குடியிருப்பு குளக்கட்டில் குறித்த இளைஞர்கள் பயணிக்கும்போது பொலிஸாரின் வாகனம் அவர்கள் மீது மோதி அவர்களுள் ஒருவர் குளத்திற்குள் வீழ்ந்துள்ளார்.

மற்றுமொருவர் குளக்கட்டின்மீது விழுந்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும், குளத்திற்குள் வீழ்ந்தவரை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடவில்லை எனவும், இதன்காரணமாக குளத்திற்குள் வீழ்ந்த இளைஞர் குளத்தின் ஆழத்திற்குச் சென்றுள்ள நிலையில் அவரை மீட்கும் பணியில் அப்பகுதி இளைஞர்களும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் பொலிஸார் குறித்த அசம்பாவிதத்தை கண்டுக்கொள்ளாமல் அருகில் உள்ள இளைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும், குளக்கட்டு பகுதியில் வீழ்ந்த இளைஞனின் தலைக்கவசம் மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டபோதிலும் இளைஞனை காணவில்லை எனவும், பொலிஸார் அங்கிருக்கும் தடயப் பொருட்களை மீட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.