துபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துரே மதுஷ்! இலங்கைக்கு வந்தது முதலாவது அறிக்கை

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துரே மதுஷ் உள்ளிட்டவர்கள் தொடர்பில் இலங்கைக்கு முதலாவது அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச பொலிஸின் துபாய் பிரிவின் ஊடாக இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச பொலிஸ் பிரிவுக்கு இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கடந்த 5 ஆம் திகதி துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட 31 சந்தேகநபர்களின் பெயர்கள் அடங்கியதாக இந்த அறிக்கை காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் துபாய் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள முதலாவது அறிக்கை இதுவென கூறப்படுகின்றது.

இதேவேளை, கடந்தவாரம் துபாயில் வைத்து மாக்கதுரே மதுஷ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடிப்படையாக கொண்டு நாளாந்தம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

மேலும், துபாயில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் அந்நாட்டு நீதிமன்றினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.