ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஆபத்து! சுற்றிவளைத்த பொலிஸார்

ஐரோப்பிய நாடுகளில் அதிகளவாக பயன்படுத்தப்படும் ‘எக்ஸ்டஸி’ எனப்படும் போதைப்பொருள் அடங்கிய பொதியொன்றை பண்டாரநாயக்க, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த போதை மாத்திரைகள் அடங்கிய பொதியானது கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி ஜேர்மனியிலிருந்து கொழும்பு, தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய ஒருவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பொதியை காலம் கடந்தும் எவரும் பெற்றுக்கொள்ள வரவில்லை. இந்த நிலையில், சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அதை திறந்து பரிசோதனைக்குட்படுத்தியபோது குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 20,920,000 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சுங்க அதிகாரிகள் குறித்த பொதி அனுப்பப்பட்ட முகவரியைச் சேர்ந்தவரை கடந்த 13 ஆம் திகதி கைதுசெய்துள்ளதுடன், அவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.