வவுனியாவில் பரபரப்பு: 35 இலட்சம் கேட்டு சிறுவன் கடத்தல்! தவிப்பில் குடும்பத்தினர்

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த 8 வயது சிறுவன் ஒருவர் நேற்று மாலை 5 மணியளவில் காணாமல் போயுள்ளார். பாடசாலை சென்று வீடு திரும்பிய குறித்த சிறுவன் தனது தாயாருடன் ரியூசன் சென்று வீடு திரும்பியிருந்தார்.

தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினுடாக சென்றிருந்தார். இருப்பினும் சிறுவன் அப்பப்பா வீடு செல்லவில்லை.

சிறுவன் செல்லும் போது அவுஸ்ரேலியாவில் உள்ள தனது கணவருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த தாயார் உரையாடி முடிந்த பின் சிறுவன் சென்ற வீட்டிற்கு சென்ற போது அங்கு சிறுவன் வரவில்லை என சிறுவனின் அப்பப்பா தெரிவித்துள்ளார். அதன்பின் இரவிரவாக உறவினர்கள் இணைந்து தோட்டம் மற்றும் தோட்ட கிணறுகள் எல்லாம் தேடிய நிலையில் சிறுவனை காணவில்லை.

இதன்பின் இன்று காலை கனகராயன்குளம் பொலிசில் நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையில், சிறுவனை சிறுவனின் தந்தை வெளிநாடு செல்ல காரணமான ஏஜென்சி கடத்தி வைத்திருப்பதாகவும் 35 இலட்சம் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு காலை அழைப்பு ஒன்று வந்திருந்ததுடன், கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசியுள்ளார்.

சிறுவன் தன்னை கூட்டிச் செல்லுமாறு தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். மாலையும் பிறிதொரு தொலைபேசியில் இருந்து 35 இலட்சம் பணம் தருமாறு கோரி தாயாருக்கு அழைப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக் கொண்ட கனகராயளன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். திரிபரஞ்சன் தமிழவன் என்ற 8 வயது சிறுவனே இவ்வாறு கடப்பட்டுள்ளவராவார்.