சர்வதேச போட்டியில் சாதித்த கிளிநொச்சி யுவதிகள்! குவியும் பாராட்டுகள்

விளையாடுவதற்கு மைதானம் இல்லை, தேவையான விளையாட்டு உபகரணங்கள் இல்லை, முழுமையான, முறையான பயிற்றுவிப்பாளர் இல்லை, பொருளாதார வசதியின்மை இப்படி எதுவுமே இல்லை ஆனால் தன்னம்பிக்கையும், முயற்சியும், சிலரின் ஊக்குவிப்பும் வழிநடத்தலும் இருந்தது. அதுவே தேசிய அணியில் இடம்பெறச் செய்தது. இதுவே அவர்களை சர்வதேச போட்டி ஒன்றிலும் சாதிக்க வைத்தது.

நடராசா வினுசா, தினகராஜா சோபிகா கிளிநொச்சி உருத்திரபுரம் சக்திபுரத்தைச் சேர்ந்த இந்த யுவதிகள். இலங்கை றோல் போல் அணியின் வீராங்கனைகள். கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பாடசாலை அணியில் விளையாடி கிளிநொச்சி மாவட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டு அந்த அணியிலும் சிறப்பாக விளையாடி இலங்கையின் தேசிய றோல் போல் அணியில் இடம் பிடித்து தங்களது திறமையை வெளிக்காட்டி சர்வதேச அளவில் இடம்பெற்ற போட்டி ஒன்றில் கலந்து கொண்டு சாதனையாளர்களாக திரும்பியிருக்கின்றார்கள்.

கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெல்கம் என்ற இடத்தில் இடம்பெற்ற ஆசிய றோல் போல் போட்டியில் இலங்கை அணியும் பங்குபற்றியிருந்தது. இலங்கை, இந்தியா, பங்காளதேஷ், நேபாளம், பூட்டான், போன்ற நாடுகள் பெண் பிரிவில் போட்டியில் பங்குபற்றியிருந்தன. இதில் இந்தியா 2019 ஆசிய றோல் போட்டியில் முதல் இடத்தையும், பங்காளதேஷ் இரண்டாம் இடத்தையும், இலங்கை மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தன.

இந்த தொடர்பில் இலங்கை அணியின் நடராசா வினுசா இலங்கை இந்திய போட்டியின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை நாட்டுக்கும் கிளிநொச்சிக்கும் பெருமையே.

கிளிநொச்சி மருதநகர் பொது நோக்கு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள நெல் உலரவிடும் தளமே இவர்களது விளையாட்டு மைதானம், நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்ற விக்ரர் சுவாம்பிள்ளை என்பரே இவர்களது பயிற்றுவிப்பாளர் அவரும் தன்னுடைய வேலைப் பளுவுக்கு மத்தியில் இவர்களுக்கான பயிற்சியை வழங்கியிருகின்றார்.

இந்த இரண்டு யுவதிகளும் சாதித்துவிட்டு ஊர் திரும்பிய போது கிடைத்த பாராட்டுகளும், சந்தித்து வாழ்த்து தெரிவித்தவர்களும், போட்டிக்கு முன் இவர்களுக்கான ஊக்குவிப்புகளையும் உதவிகளையும் வழங்கியிருந்தால் நிச்சயம் இவர்களின் சாததனை வேறு விதமாக மாறியிருக்கலாம் அது நாட்டுக்கும் மாவட்டத்திற்கும் பெருமையையும் புகழையும் ஏற்படுத்தியிருக்கும்.

வெற்றிப்பெற்ற பின்பு கொண்டாடி உரிமை கோருகின்ற சமூகம் வெற்றி பெறுவதற்கு முன் அதற்கான சூழலையும், உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்காது இருப்பது அல்லது அக்கறையின்றி இருப்பது கவலைக்குரியது.

இந்தப் போட்டியில் பங்குபற்றுவதற்காக இந்தியா செல்ல வேண்டும் அதற்கான பயண செலவுகள் ஒவ்வொருவருக்கும் 79 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் என இலங்கை றோல் போல் சம்மேளனம் அறிவித்துவிட்டது. ஒரு சர்வதேச போட்டிக்குச் செல்கின்ற அணியின் செலவுகளை இலங்கை அரசு கூட ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த விளையாட்டைப் பொறுத்தவரை அரசு அக்கறையின்றியே இருந்துள்ளது. இலங்கையில் அரசு கிரிக்கெட் போட்டிக்கு கொடுகின்ற முக்கியத்துவம் போன்று ஏனைய விளையாட்டுக்களுக்கு கொடுப்பதில்லை என்ற விமர்சனம் இங்கேயும் நிரூபிக்கப்பட்டுள்ளது. என்பது ஒரு புறமிருக்க இந்த இரண்டு வீராங்கனைகளின் குடும்ப பொருளாதாரமும் மிகவும் கீழ் நிலையில் காணப்படுகிறது.

ஒரு வீராங்கனையின் தந்தை தொழிலுக்கு செல்ல முடியாத வயோதிப நிலை. அவரது குடும்பத்தை அவர்களது திருமணம் செய்த சகோதரர்களே கவனதித்து வருகின்றனர். அவர்களும் நாளாந்த உழைப்பாளர்களே. மற்றொரு வீராங்கனையின் தந்தை கூலித் தொழில் ஏனைய சகோதரிகளின் கல்விச் செலவு உள்ளிட்ட குடும்பச் செலவையும் ஈடு செய்ய முடியாத நிலை.

இந்த நிலையில் குறித்த இரண்டு வீராங்கனையும் மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், உள்ளிட்ட பலரிடம் இந்தியா செல்வதற்கான உதவியை கோரி நின்றார்கள். ஆனால் கவலையும் துரதிஸ்டமும் எவரும் கைகொடுக்கவில்லை.

இறுதியில் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் தலா 50 ஆயிரம் ரூபாவினையும், அவ்விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஒருவர் தலா 10 ஆயிரம் ரூபாவினையும் வழங்கினார்கள். மிகுதியை கடனாகவும் பெற்று இலங்கை அணியின் சார்பாக இந்தியா சென்று சாதித்து விட்டு திரும்பியிருகின்றார்கள்.

தாங்கள் இந்தியாவுக்கு செல்வோமா? போட்டியில் பங்குபற்றுவோமா? இதுவரை காலமும் விளையாடி தேசிய அணியில் இடம்பிடித்தது பயனற்று போய்விடுமா? சர்வதேச போட்டி ஒன்றில் பங்குபற்றும் வாய்ப்பு ஏழைகளுக்கு கிடைக்காத? போன்ற கேள்விகளுடன் போட்டிக்கு செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு கிடைத்தது முதல் தங்களின் பயணம் உறுதிசெய்யப்படும் அந்த நாள் வரை தங்களின் மனங்களை பெரிதும் வருத்தியதாக தெரிவித்த அவர்கள் மிகப்பெரிய விரக்கத்தியில் இருந்தாகவும் குறிப்பிட்டனர்.

பல அலுவலகங்களுக்கு உதவிக் கேட்டு ஏறி இறங்கிய கதை மிகவும் கவலைக்கும் வேதனைக்குமுரியது. வெற்றியை உரிமை கோரி கொண்டாடி பல மேடைகளில் அவர்களின் சாதனைகளை கூறி எங்களுடை மாவட்ட பிள்ளைகள் என்று பெருமை பட்டுக்கொள்ளும் நாம் அதற்கு முன் அவர்களை கண்டுகொள்வதே இல்லை.

ஒருவேளை இந்த இரண்டு வீராங்கனைகளும் இந்தப்போட்டியில் சாதிக்காது நாடு திரும்பியிருந்தால் இவர்களை அனைவரும் மறந்திருப்போம். இம்முறை வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது. பரவாயில்லை அடுத்து முறை சாதிப்போம் அதற்காக இன்று முதல் தயாராகுங்கள், பயிற்சி பெறுங்கள் ஏற்பாடுகளை நாம் செய்கின்றோம் என்று கூறுவதற்கு இங்கு எவரும் இருந்திருக்கமாட்டார்கள். அதிஸ்டம் இவர்கள் சாதித்தது.

தாங்கள் இந்த வெற்றிக்காக கிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடசாலை அதிபர் முதல் பாடசாலை சமூகம், தங்களின் பயிற்றுவிப்பாளர் விக்ரம் சுவாம்பிள்ளை, வறுமையிலும் எங்களின் முயற்சிக்கு ஊக்குவிப்பும் ஒத்துழைப்பும் வழங்கிய பெற்றோர்கள், உதவிய உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம், அக்கழகத்தை சேர்ந்த எமக்கு நிதியுதவி வழங்கிய நல்லுள்ளம் கொண்டவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம் எனத் தெரிவித்த சாதனை வீராங்கனைகள் றோல் விளையாடுவதற்கும் பயிற்சி பெறுவதற்கும் மைதானம், ஊக்குவிப்புகளும் ஒத்துழைப்புகளும் தேவை எனவும் கோருகின்றனர்.

சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் உரிமை கோரி கொண்டாடும் நாம் அதற்கு முன் அதற்கான சூழலையும், ஊக்குவிப்புகளையும் வழங்க வேண்டும். எங்கள் சமூகத்தில் இவர்கள் போன்று இன்னும் ஏராளமானவர்கள் இலைமறை காய்களாக உள்ளனர். அவர்களுக்கு விக்ரர் சுவாம்பிள்ளை போன்றோ, இந்துக் கல்லூரி போன்றோ, இவர்களின் பெற்றோர் போன்றோ இருந்திருந்தால் அவர்களும் வெளியில் வருவார்கள்.

மத்தியில் தொடங்கி மாகாணம் மாவட்டம் பிரதேசம் வரை விளையாட்டுத்துறையில் பல நிலை பதவிகளும், கட்டமைப்புகளும் உண்டு என்பதனையும் இந்த இடத்தில் இப் பத்தி நினைவுப்படுத்துகிறது

நெல் உலரவிடும் தளத்தில் விளையாடி சர்வதேச போட்டியில் சாதித்த கிளிநொச்சி யுவதிகள்!