மகனை கொன்ற படையினர்: சாட்சியமளிக்கக் கூடாது என்று தந்தையை மிரட்டிய மகிந்த

போர் நடைபெற்ற காலத்தில் தனது மகனை கொன்றதாக சந்தேகிக்கப்படும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியமளிக்க வேண்டாம் என ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மனித உரிமை அமைச்சராக இருந்த மகிந்த சமரசிங்க, தந்தையை அச்சுறுத்தியதாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.

தனது மகன் மனோகரன் ரஜிகர் உட்பட 5 தமிழ் மாணவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில், விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தார்.

அவ்வாறு சாட்சியமளிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, மருத்துவர் மனோகரனை அச்சுறுத்தியதாக கூறும் அறிக்கை ஒன்றை உண்மை மற்று நீதிக்கான இலங்கை திட்டத்துடன் இணைந்து இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.

ஜனாதிபதி தனது சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள தெரிவு செய்த மகிந்த சமரசிங்க, போர் குற்றங்கள் நடந்ததாக கூறும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதுடன் கொலை செய்யப்பட்ட பிள்ளை ஒருவரின் தந்தையை பயமுறுத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது இதனை உறுதிப்படுத்திய சபை முதல்வர், மருத்துவர் மனோகரன் முறைப்பாட்டை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கொண்டு சென்றுள்ளதை நினைவூட்டினார்.

இலங்கை சார்பில் ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்படும் பிரதிதிகள் தெரிவு செய்யும் போது கவனமாக தெரிவு செய்ய வேண்டும் ஜனாதிபதிக்கு அறிவுறுத்திய சபை முதல்வர், ஜனாதிபதி அனுப்ப தீர்மானித்துள்ளவர்கள் செய்த வேலைகள் தனக்கு தெரியும் என குறிப்பிட்டார்.

“ அமைச்சர்கள் கொல்லப்பட்ட மாணவர்கள் பெற்றோரை தொடர்புக்கொண்டு சாட்சியமளிக்க வேண்டாம். நாங்கள் கொழும்பில் வீடுகளையும் வாகனங்களையும் தருகிறோம் என்று கூறியுள்ளனர். டொக்டர் மனோகரனின் மகன் கொலை செய்யப்பட்டார். டொக்டர் மனோகரனை தொடர்புக்கொண்டு சாட்சியமளிக்க வேண்டாம் என அமைச்சர் ஒருவர் அச்சுறுததினார்” எனக் கூறி லக்ஷ்மன் கிரியெல்ல, மகிந்த சமசிங்கவை நோக்கி கையை காட்டினார்.

இந்த குற்றச்சாட்டை மறுக்க மகிந்த சமரசிங்க முன்வரவில்லை என்பதுடன் ஜனாதிபதி தெரிவு செய்தாலும் மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள தான் ஜெனிவா செல்லப் போவதில்லை என் கூறினார்.

அதேவேளை திருகோணமலையில் 5 மாணவர்களை விசேட அதிரடிப்படையினர் கொலை செய்தது அரசாங்கத்திற்கு தெரியும் எனவும் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர போதுமான சாட்சியங்கள் இல்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, தன்னிடம் கூறியதாக அப்போதைய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர் ஓ பிளேக் தெரிவித்திருந்தார்.

“ இந்த கொலைகளை அதிரடிப்படையினர் செய்தனர் என்பது எமக்கு தெரியும். துப்பாக்கி மற்றும் தோட்டக்களை கொண்டு அதனை உறுதிப்படுத்த முடியாது. யாரையாவது கொலை செய்ய வேண்டுமாயின் அவர்கள் வேறு விதமான ஆயுதங்களை பயன்படுத்தக் கூடும்“ என பசில் ராஜபக்ச கூறியதாக ரொபர்ட் ஓ பிளேக், கடந்த 2006 ஆம் ஆண்டு அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பி இரகசிய கேபிள் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

20 வயதான மனோகரன் ரஜிகர், ஹேமச்சந்திரன் யோகராஜா, லோபிதாராஜா ரொஹான், தங்கத்துரை சிவானந்தன், சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய மாணவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் உடல்களை புகைப்படம் எடுத்து அவற்றை பகிரங்கப்படுத்திய ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் அடுத்த மூன்று வாரங்களில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த ஆறு கொலைகள் நடந்து தற்போது 13 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் சம்பந்தப்பட்டவர்கள் எவருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.