புதன்கிழமை தினத்தையும் துக்க தினமாக அனுஷ்டிக்க நடவடிக்கை

எதிர்வரும் புதன்கிழமை தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்னம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் தலைமையில் இன்று இராணுவம், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் உடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஆயர் இல்லத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிடுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாகவும்

அத்தோடு கொழும்பு தேவாலயத்தில் முதல் குண்டு வெடித்த 8 .45 மணி நேரத்துக்கு எதிர்வரும் புதன்கிழமை அன்று அனைத்து ஆலயங்களிலும் அதாவது இந்து, பௌத்த, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சரியாக காலை 8 45 மணி அளவில் ஆலய மணியை ஒலிக்க செய்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளப்படும்.

இதேவேளை வடக்கில் உள்ள ஆலயங்களில் உள்ள நிர்வாகத்தினர் ஆலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விழிப்பு குழு ஒன்றினை அமைத்து ஆலயங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆலயத்திற்கு புதிதாக வருபவர்கள் மற்றும் ஆலயத்திற்குள் சந்தேகமாக நடமாடுபவர் தொடர்பிலும் ஆராய்ந்து ஆலயங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் போது இந்த முடிவுகள் எட்டப்பட்டதாகவும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.