தற்கொலை குண்டுதாரியின் செப்பு தொழிற்சாலையில் வேலைசெய்த மற்றொருவரும் சிக்கினர்!

சினமன்கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் என்பவருக்கு சொந்தமான, குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இடமாக சந்தேகிக்கப்படும் வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையில் வேலை செய்ததாக கூறப்படும் மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்லையைச் சேர்ந்த மொஹம்மட் வைஸ் மொஹம்மட் சல்மான் நூர் பாரிஸ் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் பியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஏற்கனவே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து வரும் 10 ஆவது சந்தேக நபரான கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவும் இன்று மன்றில் அஜர் செய்யப்பட்டார்.

இதன்போது அவரையும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.