யாழ். கச்சேரியடி யுவராஜ் என்ற வயதானவர் யார் என்று தெரியுமா?

யாழ் மாவட்ட செயலகத்துக்கு அருகில் விண்ணப்பங்களை நிரப்பி தருகின்ற தொழிலை செய்யும் சிலர் இருக்கின்றார்கள்.

உதாரணமாக வாகன பதிவு மாற்றல், காணி உறுதி கொப்பி எடுத்தல், கடவுச்சீட்டு விண்ணப்பம், இறப்பு, பிறப்பு, விவாக பதிவு கொப்பிகளை எடுத்தல் போன்ற பல்வேறு விண்ணப்பங்களுக்கு அதனை சரியாக பூர்த்தி செய்திருப்பது அவசியமானது.

நாளாந்தம் இப்படியான முக்கியமான தேவைகளை நிறைவேற்ற ஏராளமானோர் யாழ்ப்பாணம் கச்சேரியை நாடி வருகின்றார்கள். சிலர் விண்ணப்பங்களை சரியாக நிரப்புவதில் இடர்பாடுகளை எதிர்கொள்கிறார்கள்.

கச்சேரி மதிலை ஒட்டிய கச்சேரி – நல்லூர் வீதியில் விண்ணப்பம் நிரப்பிக் கொடுப்பதையே சிறுதொழிலாக செய்யும் ஐந்து பேரளவில் இருக்கின்றார்கள்.

அதில் யுவராஜ் என்கிற வயதானவரை சந்தித்து பேசினேன்,

அவர் வீடமைப்பு அதிகாரசபையின் ஊழியராக இருந்து வயதாகி இப்போது ஓய்வூதியம் பெறுவதாகவும், குடும்ப நிலை கஷ்டமாக உள்ளதால், 2006 ஆம் ஆண்டில் இருந்து இதனையும் ஒரு உப வருமானம் பெறும் தொழிலாக செய்து வருவதாகவும் கூறுகின்றார். இன்றைய நவீன யுகத்திலும் அவரிடம் கைபேசி இல்லை.

கச்சேரி நல்லூர் வீதியில் கச்சேரி மதிலை ஒட்டியபடி உள்ள மைல்கல் ஒன்றில் குந்தியிருக்கிறார் யுவராஜ். காலையில் இருந்து மதியம் 12 மணிவரை அவரை அங்கே காணலாம். சாதாரண சறமும், சேட்டும் அணிந்திருக்கிறார். தாடியும் வளர்த்திருக்கிறார்.

அவரிடம் உள்ள குற்றவுணர்ச்சி என்னவென்றால் சறம், தாடி என்ற தனது எளிமையான தோற்றத்தால், தான் விண்ணப்பம் நிரப்புவேன் என்பதனை பலரும் நம்புகிறார்கள் இல்லை என்று சிரிக்கிறார். இப்ப ஜீன்ஸ், சேர்ட் போட்டால் தானே நல்ல மதிப்பு தம்பி என்கிறார்.

கடந்த வாரம் அப்பாவும், மகளும் விண்ணப்பம் நிரப்ப முடியாமல் அலைந்து திரிவதை கண்டுள்ளார். மகள் அருகில் செல்லும் போது என்னைக் கண்டுவிட்டு இவரிடம் கொடுத்து விண்ணப்பத்தை நிரப்புவோம் என அப்பாவிடம் சொல்கிறார். அதற்கு அப்பாவோ, ‘இவரை பார்த்தாலே தெரியுது, இந்த ஆள் விண்ணப்பத்தை நிரப்ப மாட்டார்’ எனக் கூறி மகளை அழைத்து செல்கிறார்.

இவ்வாறு தோற்றத்தால் தான் அவமதிக்கப்படுவதாகவும் சொல்கிறார். ஒரு நாளைக்கு 300 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை சில நாட்களில் கூடுதலாகவும் வருமானம் கிடைக்கும் என்கிறார்.

விண்ணப்பம் நிரப்புவதோடு ஆங்கிலத்துக்கு மொழிமாற்றமும் செய்து கொடுப்பதாகவும், ஒரு விண்ணப்பம் நிரப்ப 50 ரூபாய் பெறுவதாகவும் சொல்கிறார்.

கடந்த காலங்களில் இவ்வாறு விண்ணப்பம் நிரப்புபவர்கள் அதிகளவு காசு வாங்கி கொண்டு நிரப்புவதாக புகார் வருவதாக கூறி அரசாங்க அதிபர் வேதநாயகன் விண்ணப்பங்களை வெளியில் நிரப்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவித்திருந்தார் என யுவராஜ் ஐயாவிடம் கேட்ட போது,

சிலர் அதிக கட்டணம் வசூலித்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், நான் அன்று தொடக்கம் இன்று வரை மிக குறைந்த கட்டணத்தையே வசூலித்து வருகிறேன். தொடர்ந்தும் புகார் சென்றால் பிழை செய்பவர்களை கூப்பிட்டு விசாரித்திருக்கலாம். அப்படியானவர்களுக்கு தடை விதித்திருக்கலாம். ஆனால், அரசாங்க அதிபர் எங்களை எதுவும் கூப்பிட்டு கதைக்க கூட இல்லை என்றார்.

பெரும்பாலும் கிராமங்களில் இருந்து வரும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, பிள்ளைகள் எல்லோருக்கும் நம்பிக்கையாக இருப்பது இப்படியான யுவராஜ்கள் தான்.

அவசர அலுவலாக கச்சேரிக்கு வந்து இன்று எப்படியாவது முடித்துக் கொண்டு போக வேண்டும் என தொலை தூரங்களில் இருந்து பஸ்களில் ஏறும் எளிய மனிதர்களுக்கு கச்சேரியடியில் இருக்கும் இப்படியான யுவராஜ்கள் தான் மிகப்பெரிய ஆறுதல்.

பொதுமக்களின் வரிப்பணத்தை ஊதியமாக பெறும் அரசாங்க அதிகாரிகளும், விண்ணப்பத்தை நிரப்ப வரும் பொதுமக்களும் இப்படியான எளிமையான யுவராஜ்களை மரியாதையுடனும், சுய கௌரவத்துடனும் நடாத்த வேண்டும். ஏனெனில் இப்பூமி எல்லோருக்குமானது.