கடந்த கால யுத்தம் இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமாக இருந்துவிடக் கூடாது

கடந்த கால யுத்தம் எதிர்கால தேசிய நல்லிணக்கத்திற்கான பாடமாக அமைய வேண்டுமே அன்றி, இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமாக இருந்துவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த கால யுத்தமானது கற்றறிந்த பாடமாக இருக்க வேண்டும். கழற்றியெறிந்த பாடமாக இருக்கக்கூடாது. அந்தக் கற்றறிந்த பாடங்களின் வேதனைமிக்க கதாபாத்திரங்களாகவே இன்று காணாமற்போனோர்களது உறவினர்கள் காத்திருக்கின்றார்கள்.

காணாமற்போன தங்களது உறவுகளைத் தேடிச் செல்லும் பயணத்தில், அவர்கள் இன்று கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டாவது, தங்களது காணாமற் போன உறவுகளைக் கண்டறிவதற்கான பாதையில் வெளிச்சம் பிறக்கும் என்ற அவர்களது எதிர்பார்ப்பகளும் தற்போது தகர்க்கப்பட்டு வருவதாகவே தெரிய வருகின்றது.

காணாமற்போரைக் கண்டறிவதற்கான அலுவலகம் தொடர்பில் ஆரம்பத்தில் எமது மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இன்று பொறுப்புமிக்க மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டியவர்கள் பலரும், தெரிவித்து வருகின்ற ஒன்றுக்கொன்று முரணான கருத்துகளால் அம் மக்களது நம்பிக்கைகள் சிதைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.