கண்டியில் மீண்டும் ஊரடங்கு – இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதால் பதற்றம்

கண்டி மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட போதிலும், தெல்தெனிய, பல்லேகல காவல்துறை பிரிவுகளில் மீண்டும் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை அடுத்து, நேற்று பிற்பகல் 3 மணிக்கு கண்டி மாவட்டம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

எனினும், நேற்றிரவும் சில இடங்களில் பள்ளிவாசல்கள் முஸ்லிம்களின் வாணிப நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட போதும், கண்டி மாவட்டத்தில் பதற்ற நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற வன்முறைகளின் போது கொல்லப்பட்ட இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டதை அடுத்து பதற்றநிலை அதிகரித்துள்ளது.

திகண, கென்கல்லவில் நேற்று தீக்கிரையாக்கப்பட்ட வாணிப நிலையம் ஒன்றுக்குள் இருந்து 27 வயதுடைய இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

மற்றொரு ஆணின் சடலமும் இன்று மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டதை அடுத்து, இன்று முற்பகல் தெல்தெனிய, பல்லேகல காவல்துறை பிரிவுகளில் உடனடியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like