சுவிஸ்குமார் தப்பி சென்ற வழக்கு – சந்தேக நபரின் பிணை நிபந்தனை நீக்கம்!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமார் தப்பி செல்ல உதவினார் என குற்றம் சாட்டப்பட்டு உள்ள முதலாவது சந்தேக நபரின் பிணை நிபந்தனைகளில் ஒன்றினை நீதிமன்று இரத்து செய்துள்ளது. குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அதன் போது சந்தேக நபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சுபாஸ்கரன் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணிகளான துசித் ஜோன்தாஸன் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி சமிந்த அத்துக்கோரள ஆகியோர் , சந்தேக நபர் தொடர்பிலான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரி மன்றில் தெரிவித்தமையை சுட்டிக்காட்டியும் , சந்தேக நபரின் கடவுசீட்டு மன்றின் பாதுகாப்பில் உள்ளமையை சுட்டிக்காட்டினர்.

அத்துடன் பிணை நிபந்தனைகளில் ஒன்றான ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை கொழும்பில் உள்ள குற்றபுலனாய்வு பிரிவு திணைக்களத்திற்கு காலை 09 மணி முதல் 11 மணி வரையிலான நேர பகுதிக்குள் கையொப்பம் இட வேண்டும் எனும் நிபந்தனையை இரத்து செய்ய கோரி மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தினை பரிசீலனை செய்த நீதிவான் , குறித்த பிணை நிபந்தனையை இரத்து செய்ய உத்தரவிட்டார். அத்துடன் உத்தரவினை சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் குற்ற புலனாய்வு பிரிவு பணிப்பாளருக்கு அனுப்ப பதிவாளருக்கு பணிப்புரை விடுத்தார். அதனை தொடர்ந்து குறித்த வழக்கினை எதிர்வரும் ஜீன் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.