பிணை கோரி அர்ஜூன் அலோசியஸ் மனு தாக்கல்

பர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் தமக்கு பிணை வழங்குமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் திருத்த மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கியின் பிணை முறிவிவகார சம்பவம் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தமக்கு பிணை வழங்க மறுத்து வருகிறது என மனுதார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்வைத்துள்ள அறிக்கையில் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் எந்த குற்றமும் கண்டறியப்படவில்லை என்பதால், நீதவானின் முடிவை திருத்தி தமக்கு பிணை வழங்குமாறு மனுதார்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.